பக்கம் எண் :

2725.

     தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
     தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம் - போதாதா
     நந்தா மணியே நமச்சிவா யாப்பொருளே
     எந்தாய் எனப்புகழவே.

உரை:

      நெஞ்சமே, பிரமன் நமது தலையில் எழுதாது விட்ட குறைக்கு நாம் யாது செய்யலாம்; உதவி நாடி உலகிற் செல்வர்களை யடைந்து தரும தாதாவே தருக எனப் புகழ்ந் தலைந்தோம்; என்ன பயன்? கெடாத மாணிக்க மணியே, நமசிவாய என்ற பெயர்ப் பொருளாகிய சிவபெருமானே, எந்தையே என்று போற்றுவ தொன்றே போதுமல்லவா? எ. று.

     தா என வரும் எழுத்து ஏழையும் கூட்ட வரும் சொல் எழுதா; அது குறை யென்பதனோடு சேர வுளதாவது எழுதாக் குறை. எழுதாக் குறை என்பது பிறவிக் காலத்தில் படைப்புத் தெய்வமாகிய பிரமன் செல்வ வாழ்வு பெறுக எனத் தலையில் எழுதா தொழிந்தது. “முன்னம் பங்கயத்தோன், எழுதாப்படி வருமோ சலியாதிரு என் ஏழை நெஞ்சே” எனப் பட்டினத்தார் கூறுவது காண்க. தாதா - கொடை வள்ளல். பெறுவதைக் கொடாது தொகுத்துத் தொகை கண்டுஅதன் மிகுதிக்கண் ஆசையுற்று உள்ள மிழந்தோர் யார்க்கும் யாதும் ஈயாராக, அவர்களைக் “கொடை வள்ளலே சிறிது தா” என இல்லாதவர் இரப்பதும், ஈயாச் செல்வர் மறுப்பதும் உலகியலாதலின், “தாதா தா என்று உலகில் தான் அலைந்தோம்” என்று உரைக்கின்றார். இல்லாதவர் இல்லாதவராதற்குக் காரணம் சிவனது திருவருட் கிலக்காகாமை; சிவபெருமானை மனத்தால் நினைந்து, அவன் பொருள்சேர் புகழ்களை வாயால் மொழிந்து, அவன் திருவடியை மெய்யால் வணங்குதல் இல்லாமையால் அப்பெருமான் திருவருட் பேற்றுக்கு விலக்காயினர் என அறிக. உள்ளன்புடன், சிவபரம் பொருளை நினைந்து வணங்கி, “நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே, எந்தாய் எனப் புகழவே போதாதா” என்று புகன்று மொழிகின்றார். நந்துதல் - கெடுதல்; குற்றப்படுதல். நமச்சிவாயப் பொருள் - நமச்சிவாய என்ற பெயர்க்குரிய பொருள். பெயரெல்லாம் பொருள் மேல் நிற்பன வாதலால், நமசிவாய என்ற பெயர் குறிக்கும் பரம்பொருளே என்பார், “நமச்சிவாயப் பொருளே” என இயம்புகின்றார். “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” என்று திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் உரைப்பது காண்க. என்னை உலகிற் பிறப்பித்த தந்தையே என வேண்டுக என்பாராய், “எந்தாய்” என இறுதிக்கண் வைத்து இசைக்கின்றார். நல்ல தந்தை தான் பெற்ற மகன் விரும்புவனவற்றை விரைந்து தருவன் என்ற குறிப்புப் பற்றி, “எந்தாய்” எனப் புகழ்ந்தோதுவது ஒன்றே போதும்; தருக என்று கேட்பதும் மிகை என்றற்கு, “புகழவே போதாதா” என அறிவுறுத்துகின்றார். ஞானசம்பந்தர் முதலிய தொண்டர் வரலாறுகள், “இது தருக” என வேண்டியதாக உரைத்ததில்லை.

     இதனால் இறைவன் பொருள்சேர் புகழை யோதுக; எல்லாம் பெறலாம் என அறிவுறுத்தவாறாம்.

     (10)