பக்கம் எண் :

15

15. தனித் திருவிருத்தம்

 

கட்டளைக் கலித்துறை

2729.

     நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
     சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
     பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
     கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே.

உரை:

      கங்கை தங்கிய சடை முடியும், இன்பம் நிறைந்து, முழு மதியின் அழகு பொருந்தி, அமுதம் பொழியும், குறுநகை விளங்கத் திகழும் முகமும், உலகங்களைப் படைத்த பச்சைப் பசுங்கொடி போன்ற உமாதேவி தங்கும் இடப்பாகமும், கருமையான கழுத்தும், திருமாலின் கண் கிடந்து பொலியும் திருவடியும் என் கண்ணுக்குக் காட்சிவிருந்து செய்கின்றன. எ.று.

     நீர் - கங்கையாறு. வேணி - சடை. ஆனந்தம் - இன்பம். சிவம் ஆனந்தமாகலின், “ஆனந்தம் பூத்த திருமுகம்” என்று புகழ்கின்றார். நிறைமதியின் சீர் - கலை நிறைந்த முழுமதியின் அழகு. இளநகை-முறுவற் சிறப்பு; குறுநகை நகையின் மாண்பு. இதனைக் “குமிண் சிரிப்பு” என்பார் திருநாவுக்கரசர். பார் முதல் அண்டங்கள் அனைத்தையும் பெற்ற பெருமாட்டியாதல் தோன்ற, “பார் பூத்த பச்சைப் பசுங்கொடி” என உமையம்மையைப் பராவுகின்றார். பசுமை நிற மிகுதியும் இளமைத் தன்மையும் இனிது விளங்கப் “பச்சைப் பசுங்கொடி” எனப் பகர்கின்றார். கொடி - ஆகு பெயரால் உமையம்மைக் காயிற்று. இடப்பாகம் திருமேனியின் செம்பாகமாதலால், “செம்பாகம்” என்று குறிக்கின்றார். விடமுண்டு கரிதாகிய கழுத்தைக் “கார் பூத்த கண்டம்” என உரைக்கின்றார். சக்கரம் வேண்டித் திருமால் ஆயிரம் பூக் கொண்டு சிவனை யருச்சிக்க ஒன்று குறையவே தன் கண்ணில் ஒன்றைப் பறித்துத் திருவடியில் இட்ட புராணச் செய்தி புலப்பட, “கண் பூத்த கால்” எனக் கூறுகின்றார். திருமுடி முதல் திருவடி காறும் கண்ணாரக் கண்டு இன்புற்றமையின், “என் கண் விருந்து” எனக் கட்டுரைக்கின்றார்.

      இதனால், சிவபெருமான் திருமுடி முதல் திருவடி வரையில் கண்ணாரக் கண்டு இன்புற்றமை கூறியவாறாம்.