பக்கம் எண் :

273.

    எளியேன் என்ன இருப்பாரோ
        ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
    அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ
        அழியாக் காமம் திருப்பாரோ
    களியேன் என்ன உருப்பாரோ
        கருதும் அருட்குக் கருப்பாரோ
    தெளியேன் யான்என் செய்கேனே
        தென்பால் தணிகைப் பொருப்பாரே.

உரை:

     தென் திசையில் உள்ள தணிகை மலையை யுடைய முருகப் பெருமான் எளியவன் என்று நினைந்து என்னை இகழ்ந்து பாரா முகமாய் இருப்பாரோ, அன்றி ஏழைகளிடத்து இரக்கம் கொள்ளும் விருப்புடை யவரோ, அளிக்கத் தக்க எனது பெரிய நெஞ்சின்கண் எழுந்தருளுவாரோ, அதன்மேல் எனது கெடாத காதல் விருப்பத்தைத் தணிப்பாரோ அல்லது களி மயக்குற்றவன் என்று கருதி என் மேல் சினம் கொள்வாரோ, அன்றி யாவராலும் நினைக்கப்படும் திருவருளாகிய செல்வத்தால் குறைபாடுடையவரோ, என்ன செய்வாரோ என்னால் தெளிந்து கொள்ள முடியவில்லை யாதலால் யான் யாது செய்வேன், எ. று.

     தென்னாட்டில் உள்ள தணிகை மலையில் வீற்றிருப்பது பற்றி முருகப் பெருமானைத் “தென்பால் தணிகைப் பொருப்பார்” என்று சிறப்பிக்கின்றார். பொருப்பு - மலை. பொறுக்கலாற்றாத ஆர்வத்தால் உரையாடுகின்றாராதலால் தான் தணிகைப் பெருமான் திருமுன் சென்றால் தனது சிறுமை நோக்கி இகழ்ந்து தள்ளி விடுவரோ என ஐயுறுவது தோன்ற, “எளியேன் என்ன இருப்பாரோ” என்று கூறுகிறார். இருத்தல், ஈண்டுப் பாரா முகமாய் இருத்தல். ஏழைகட்கு இரங்கும் அருளாளர் எனப்படுவது நினைவில் எழுதலும், அஃது உண்மை தானோ என நினைக்கின்றமை புலப்பட, “ஏழைக் கிரங்கும் விருப்பாரோ” என உரைக்கின்றார். விருப்பார் - விருப்பமுடையவர். அளிக்கத் தக்க அன்பர்கள் உள்ளத்தில் எழுந்தருளுபவன் என்பது நினைவுக்கு வருதலும் அப்பெருமான் தன் நெஞ்சிற் புகுந்து தங்குதற்குரிய பெருமை உளதா வெனச் சிந்தித்துக் கண்டு, “அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ” எனப் புகல்கின்றார். பேர் நெஞ்சு - பெருமை யுடைய நெஞ்சம். பெருமை, இறைவன் தங்குதற்குரிய தகைமை மேற்று. பிற பொருள்கள் மேல் உளதாகும் இச்சைகள் போலாது அப்பெருமான் திருவருளின்பால் உண்டாகிய அன்பு மேன் மேலும் பெருகிய வண்ணமிருத்தலால் அதனை, “அழியாக் காமம்” என்றும், அதுகாரணமாகப் பிறக்கும் அவாவை நீக்குவரோ என்பார், “தீர்ப்பாரோ” என்றும் சொல்லுகின்றார். தெளிவுறச் சிந்தித்து முறைப்பட மொழியாமையால் களி மயக்குற்றவன் என்று கருதிச் சினம் கொண்டு என்னைக் கடிந் தொழிப்பாரோ வென நினைக்கின்றாராதலின், “களியேன் என்ன உருப்பாரோ” என்றும், உடைமையால் குறையுடையார்பால் இரப்பவரை அவர்கள் உருத்து நோக்குவது போல் என்னை யவர் உருத்துக் கடிவரேல் அவர்பால் அருட்செல்வக் குறைவு உளதா மென நினைக்கப்படுமே யென்பார், “கருதும் அருட்குக் கருப்பாரோ” என மொழிகின்றார். உருத்தல் - வெருளுதல். கருப்பு - குறைபடுதல். இந் நினைவுகளால் அறிவு கலங்குதல் தோன்றத் “தெளியேன்” எனவும், கலக்கத்தால் செயல்வகை புலப்படாமை தோன்ற, “யான் என் செய்கேன்” எனவும் ஏங்கி யுரைக்கின்றார்.

     இதனால் தணிகை முருகன் திரு முன்னர் அடைந்தவழி அப்பெருமான் தன்னை, “இனிது ஏற்று அருள் செய்வாரோ” என எண்ணி அலமருமாறு பெறப்படும்.

     (2)