2730. வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்
கீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்
பாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி
ஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே.
உரை: வீழ்து போல் தொங்குகின்ற சிவந்த சடையையுடைய சிவபெருமான் என்னுடைய வினை வகை யிரண்டும் கீழ்மையுற்றுக் கெடவும், நான் அவ்வினைச் சுழற்கு எட்டாத மேனிலை எய்தவும், அது காரணமாக என் நெஞ்சை வருத்தும் துன்பமனைத்தும் தீர்ந் தொழியவும் பேரின்பம் விளையவும் திருவருள் செய்வானாயின், அதன் பின்பு எடுக்கக் கடவ பிறப்புக்கள் ஏழாயினும் ஆகுக எட்டாயினு மாகுக; அவை என்னை என்ன செய்ய வல்லனவாம்; ஒன்றும் என்னைத் தொடராது. எ.று.
வீழ் - வீழ்து. ஆக உவமப் பொருளது. ஞாலுதல் - தொங்குதல். மின் போற் சிவந்தவையாதலின், “செவ்வேணி” என்று சிறப்பிக்கின்றார். நாவுக்கரசர், “கற்றைச் செஞ்சடையான்” (தனிக்) என்பது காண்க. பிரான் - தலைவன். கீழாதல், பயனின்றி யழிதல். கிலேசம் - துன்பம். பயிராதல் - விளைதல். பற்றுக் கோடாகிய வினை முதலுயிர் - பற்றற்கெட்டாத மேனிலை எய்திய வழி, வினை பற்றுக்கோடின்றிக் கெடும் என அறிக. நான் என்றது, வினை செய்த முதலாகிய உயிர் மேல் நின்றது. ஆதாரமாகிய வினை கெடும் போது, அதன் பயனாகும் துன்பம் அழிந்து படுதலால் “நெஞ்சக் கிலேச மெல்லாம் பாழாக” என்கின்றார். இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் போலத் துன்ப நீக்கமும் இன்பத் தோற்றமும் உடனிகழ்ச்சியாதலால், “இன்பம் பயிராக” என இசைக்கின்றார். வினைக்கேடு முதல் இன்பப் பேறு ஈறாகவுள்ளவை சிவபிரான் திருவருள் வாய்க்கினல்லது இல்லாமையால், “வாய்க்கில்” என அதன் அருமை தோன்றக் கூறுகின்றார். திருவருள் வாய்த்த போது தூலப் பயனாகிய பிறவிகள் ஏழ் என்பன எட்டாயினும் பயனிலவாம் என்பார், “பிறவி ஏழாக அன்றி மற் றெட்டாக இங்கென்னை என்செய்யும்” என இறுமாக்கின்றார்.
இதனால் திருவருள் வாய்க்கப்பெற்றார்க்குப் பிறவிகள் ஏழும் எட்டாயினும் அக்கரையில்லை எனத் தெரிவித்தவாறாம். (2)
|