2789. வல்லி ஆனந்த வல்லி சேர்மண
வாள னேஅரு ளாள னேமலை
வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.
உரை: கொடி போன்றவளும், சிவானந்தம் நல்க வல்லவளுமாகிய உமாதேவிக்கு மணவாளனே, யாவர்க்கும், அருள் புரிபவனே, மலையை வில்லாகக் கொண்டவனே, புன்னகை செய்தே முப்புரத்தை எரித்தவனே, விடை யேறுபவனே, புலைத் தன்மையை யுடைய உலகியற் போகத்தைக் கண்டு விரும்பி நினது அழகிய திருவடிப் பேற்றின்கண் உண்டாகும் இன்பத்தை யிழந்தேன்; ஆதலால் யான் ஓர் ஓட்டைக் குடமாயினேன்; என்னை திருவருட் குரியனாக்கத் திருவுள்ளம் கொள்ளுவாயோ. எ.று.
வல்லி - பூங்கொடி; உமையம்மை - பசுமை நிறக் கொடி போன்றவளாதலின், “வல்லி” எனச் சிறப்பிக்கின்றார். திருவருள் ஞான முடையார்க்குச் சிவானந்தத்தைப் பெருகத் தரவல்லவளாதலின் “ஆனந்த வல்லி” எனப் பரவுகின்றார். அப் பெருமாட்டிக்குக் கணவனென்பதால், “ஆனந்த வல்லிசேர் மணவாளனே” என்றும், அடியார்க்குத் திருவருள் ஞானத்தை நல்குதலால், “அருளாளனே” என்றும் கூறுகின்றார். உயிர் தோறும் கலந்து அருளொளி செய்தலால், இவ்வாறு கூறுகிறாரென்றுமாம். மலைவில்லி - மேரு மலையை வளைத்து வில்லாகக் கொண்டவன். “எண்ணிலார் முப்புரம் எரியுண நகை செய்தார்” (மழபாடி) என்று ஞானசம்பந்தர் முதலியோர் போற்றுதலால், “நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே” என்று புகழ்கின்றார். புரம் வீழ்த்தவனே விடையவனே எனப் பிரித்து இயைக்க. உலகியல் போகம் நிலையின்றிக் கெடுதலால், “புலைப் போகம்” என இழித் துரைக்கின்றார். புலைப் போகமாயினும் அதனை விரும்பினேன் என்றற்குப் “புல்லி” யெனப் புகல்கின்றார். போகத்தில் வேட்கையுற்றுத் திருவடிக்கண் பெறலாகும் சிவபோகத்தைக் கைவிட்டேன் என வருந்துவாராய், “புலைப் போகம் வேட்டு நின் பொன்னடித் துணைப் போகம் போக்கினேன்” எனக் கூறுகின்றார். வேட்டல் - விரும்புதல். புல்லுதல் - மேற்கொள்ளுதல். அடித் துணை - இரண்டாகிய திருவடி. இல்லி - துளை; துவாரம் எனவும் வழங்கும். இல்லிக் கடம் - ஓட்டைக் குடம். பொறி புலன்கள் மேற் சிந்தையைப் பரக்க விட்டு வாழ்தலால், “இல்லியார் கடமாயினேன்” என வுரைக்கின்றார். கடம் - குடம். திருவருட் பேற்றுக் குரியவன் என்று எண்ணி யருள வேண்டும் எனற்கு “எண்ணுதியோ” என இசைக்கின்றார்.
இதனாற் பொறி வாயில் ஐந்தும் அவியாது புன்மை யுற்ற திறம் புகன்றவாறாம். (4)
|