2791. அன்பர் இதய மலர்க்கோயில்
அமர்ந்த பரமா னந்தத்தைத்
துன்பம் அகலச் சுகமளிக்கும்
தூய துணையைச் சுயஞ்சுடரை
வன்ப ரிடத்தின் மருவாத
மணியை மணியார் மிடற்றானை
இன்ப நிறைவை இறையோனை
என்னே எண்ணா திருந்தேனே.
உரை: மெய் யன்பர்களின் மனமாகிய மலரைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளும் இன்ப வடிவினனாகிய பரமனும், துன்ப மில்லையாமாறு இன்ப மளிக்கும் தூய துணைவனாம் சுயஞ் சுடராயவனும், வன்மனமுடைய அருள் உள்ளத்தில் நில்லாத மாணிக்க மணி போன்றவனும், நீலமணி போன்ற கழுத்தை யுடையவனும், நிறைந்த இன்பமானவனும் இறைவனுமாகிய சிவபெருமானை இதுவரையும் எண்ணேனாயினேன்; நான் இருந்தவாறு என்னே. எ.று.
உள்ளத்தைத் தாமரையாகவும், அதன்கண் இறைவன் எழுந்தருளுவதாகவும் சான்றோர் உணர்ந்தோதி வருதலால், “அன்பரிதய மலர்க்கோயில் அமர்ந்த பரமானந்தம்” எனக் கூறுகின்றார். “அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் முள்ளப் புண்டரிகத்து உள்ளிருக்கும் புராணர்” (வீழி மிழலை) என்று ஞானசம்பந்தர் எடுத்தோதுவது காண்க. மேலாய தூய இன்பமே யுருவாக அமைந்தவன் என்பதனால், “பரமானந்தம்” என்பாராயினர்; பரம ஆனந்தம், பரமானந்த மாயிற்று. இருள் நீங்க ஒளி தோன்றுமென்றாற் போலத் “துன்ப மகலச் சுக மளிக்கும் தூய துணை” எனச் சொல்லுகின்றார். வாழ்வார் மனத்தில் இருள் படரும்போது அறிவொளி நல்குவதால் இறைவனைத் “தூய துணை” என்று சொல்லுகிறார். தூய்மை - பயனோக்காமை. சுயஞ் சுடர் - தானே யொளிரும் தனி ஞான விளக்கு. வன்பர் - அன்புக்கு மறுதலையான குணஞ் செயலுடையவர். எல்லாருள்ளத்தும் எழுந்தருளுபவனாயினும் இறைவன் வன்பருள்ளத்தில் அன்பின்மையால் நிலவும் இருளடர்ந்து அவனைக் காண மாட்டாது அறிவை மறைப்பதனால் “வன்பரிடத்தில் மருவாத மணி” எனக் கூறுகின்றார். மேனி மாணிக்க மணியையும், கழுத்து மாணிக்க மணியையும் போல்வதால் “மணி” என்றும், “மணியார் மிடறு” என்றும் அடுத்து உரைக்கின்றார். இன்பமே திருமேனி எனற்கு “இன்ப நிறைவு” என்கின்றார். இன்ப நிறைவாகிய இறைவனை மறத்தல் தீதாதலால், “என்னே எண்ணா திருந்தேனே” என வருந்துகிறார்.
இதனால், இறைவனை மறந்த குற்றத்துக்காக வருந்தியவாறாம். (2)
|