2793. கறையோர் கண்டத் தணிந்தருளும்
கருணா நிதியைக் கண்ணுதலை
மறையோன் நெடுமாற் கரியசிவ
மலையை அலையில் வாரிதியைப்
பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும்
புனித ஒளியைப் பூரணனாம்
இறையோன் தன்னை அந்தோநான்
என்னே எண்ணா திருந்தேனே.
உரை: நஞ்சின் கறை படிந்த கழுத்தினையுடைய அருட் செல்வனும், கண் பொருந்திய நெற்றியை யுடையவனும் நான்முகனும் திருமாலும் நாட அரியனான சிவமாகிய மலையும், அலையில்லாத கடலும், பொறுமை பூண்டோர் உள்ளத்துட் புகுந்திருந்து ஒளிர்கின்ற தூய ஒளியும், குறைவிலா நிறைவுடைய இறைவனுமாகிய சிவபரம் பொருளை இத்துணை நாளும் நினையா திருந்து, அந்தோ! அவப்பொழுது போக்கினனே! என்னே என் அறிவிருந்தவாறு! எ.று.
தூய பொன் வண்ணங்கொண்ட திருமேனியில் அமுதமுண்ண விழைந்தார் பொருட்டுத் தடையாய் நின்ற கடல் விடத்தை யுண்டு அருள் புரிந்த அருட் செயலை நினைக்கின்றாராதலின், “கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணாநிதியை” எனப் புகல்கின்றார். இவ்வருள் நிலையை வியந்து, “என் பெரிய வானவர்கள் நின்று துதி செய்ய இறையே கருணையாய் உண்பரிய நஞ்சதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன்” (மாணிகுழி) என ஞானசம்பந்தரும் நவின்றார். கருணாநிதி - அருட் செல்வம். பிணங்கிய மனத்தால், வேறுபட்டு நின்று முயன்றமையின் அயனும் மாலும் சிவனைக் காணாராயினர் என்றற்கு, “மறையோன் நெடுமாற்கு அரிய சிவமலையை” என்கின்றார். நாளும் மறை யோதுபவனாயினும் பிரமனாலும், நெடிய பண்புடையவனாயினும் திருமாலாலும் காண்பது இயலா தொழிந்தமை குறிப்பாய் விளங்க நிற்றல் காண்க. நில வுலகத்து அலை கடலின் வேறுபடுத்தற்கு, “அலையில் வாரிதி” என இயம்புகின்றார். வாரிதி - கடல். செம்மைப் பண்பும், திண்ணிய அறிவும் கொண்டு யாவர் எவ்வாற்றால் தீது செய்யினும் பொறுத்தாளும் அன்புடையார் மனமே ஞான நிலையமாதலின், அதன்கண் இறைவன் எழுந்தருள்வது இயல்பாதல் புலப்படுத்தற்கு, “பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியை” எனப் புகல்கின்றார். ஒளி பெற்றார் உள்ளம் தூய்மையுற இலங்குவது பற்றிச் சிவஒளியைப் “புனித ஒளி” என்று புகழ்கின்றார். எல்லாவற்றாலும் குறைவற நிறைந்த பரம்பொருள் என்பது பற்றிப் “பூரணனாம் இறையோன்” எனப் போற்றி யுரைக்கின்றார்.
இதனால், எங்கும் எல்லாவற்றாலும் குறைவற நிறைந்தருளும் சிவத்தின் முழுமையை நினையாதொழிந்தமைக்கு வருந்தியவாறாம். (4)
|