பக்கம் எண் :

எண

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2797.

     தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
          தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
     ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
          அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
     ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
          என்செய் வேன்இதையார்க்கெடுத் துரைப்பேன்
     சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
          தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.

உரை:

     தில்லையம்பலத்தின்கண் எழுந்தருளி விளக்கமுறும் ஞானவொளி விளக்கமே, எனக்குத் தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் ஆகின்றவன் நீயே யாவாய்; என்னைக் காத்தளிக்கின்ற ஒரு தலைவனும், வாழ்தற்கு வேண்டிய பொருளும், நுகர்தற் பொருட்டு ஆய்ந்துணரும் இன்பமும் அதற் கின்றியமையாத அன்பும் மெய்யுணர்வும் நீயே யாவாய் என நின்பால் அன்புற்று இன்று வரையிருந்தேன்; அங்ஙனமிருக்கும் என்பால் நீ சிறிதும் இரங்குகின்றாயில்லையாயின் யான் என்ன செய்வேன்; இதனை யாவரிடம் எடுத்துச் சொல்லுவேன்; சிறு குழவியும் நினதருளின் பால் ஆசை கொள்ளும் என்பதை அறிவாயாக. எ.று.

     செய்யுளாகலின், “தெய்வமும் குருவும்” மாறி நிற்கின்றன. முறை செய்யும் தலைவனாதலின், அரசனை, “தங்குகின்ற - தோர் தலைவன்” எனவுரைக்கின்றார். தாங்குதல் - ஈண்டுக் காத்தலும் அளித்தலும் குறித்து நிற்கின்றது. பொருளிலார்க்கு வாழ்வில்லையாதலால், வாழ்விற்குரிய பொருளும் இறைவனென எண்ணுகிறார். இறைவனருள் வழியது பொருள் என்பது பற்றி இவ்வாறு கூறுகிறார் எனினும் அமையும். பொருளாலும் அதனைச் செய்யும் நெறியாலும் முடிவிற் பெறுவது இன்பமாகலின், “ஆயும் இன்பம்” எனவும், அது நிலையுறுவது அன்பு நெறியாகலின், “அன்பு” எனவும், இன்பமும் அன்பும் சிறப்புறுவது மெய்யுணர்வுக்கென்பது பற்றி, “மெய்யறிவு” எனவும் உரைக்கின்றார். தாய் தந்தை முதலாகவும் மெய்யறிவு ஈறாகவும் தனித்தனி நிறுத்திக் கூறினாராயினும், எல்லாம் சிவத்தின் விரிவு என வற்புறுத்தற்கு “அனைத்தும் நீயே என ஆதரித்திருந்தேன்” என்று கூறுகின்றார். என்பால் இரக்கம் கொண்டு நீ நின் திருவருளை நல்குதல் வேண்டும்; இன்று வரை நீ செய்திலை; இவ்வாறாயின், யான் எங்ஙனம் நற் பேற்றுக்குரிய வாழ்வு பெறுவேன் என்பாராய், “ஏயும் என்னளவு இரக்க மொன்றிலையேல் என்செய்வேன்” எனவும், நின்னை ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லையாதலால் யாவரிடம் சொல்லி நின்னுடைய இரக்கத்தை பெறுவேன் என்றற்கு “யார்க் கெடுத்துரைப்பேன்” எனவும் இயம்புகிறார். நீ மன மிரங்கினாயாயின், யான் பெறும் திருவருள் என்னை வாழ்விப்பதாம் என்பது கருத்து. திருவருள் ஞான வொளியும் இன்பவுருவ முடையதாகலின், கள்ளமில்லாத உள்ளம் கொண்ட சிறு குழந்தையும் அதனைப் பெற ஆசைப்படுகின்றன என்பாராய், “சேயும் நின்னருள் நசையுறும்” என நவில்கின்றார். நசை - விருப்பம்.

     இதனால் சிறு குழந்தைக்கும் திருவருள் மேல் ஆசை யுண்டென அறிவித்தவாறாம்.

     (2)