பக்கம் எண் :

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2798.

     அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
          அருண்மருந் தொளிர்குணக் குன்றே
     அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
          அருட்கிர ணங்கொளும் சுடரே
     அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
          அருட்சுவை கனிந்தசெம் பாகே
     அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
          அருண்மய மாம்பர சிவமே.

உரை:

     அருளாகிய பழம் பழுத்து உயர்ந்த கற்பக மரமே, அருளாகிய மருந்தை நல்கும் ஒளி தரும் குணக் குன்றமே, அருளாகிய அமுதத்தை வழங்கும் ஒப்பற்ற கடல் போன்றவனே, அருளாகிய கதிர்களைக் கொண்ட ஞானச் சுடரே, அருளாகிய ஒளியை வீசும் பெறற்கரிய மணி போன்றவனே, அருளாகிய சுவையையுடைய செம்பாகமாக அமைந்த பாகு போன்றவனே, அருளாகிய நறுமணம் கமழும் ஒப்பற்ற தனி மலரே, அருள் மயமாகிய பரசிவமே. எ.று.

     கற்பகத் தரு, இந்திர னுலகத்திற்கு கனி பழுத்தளிக்கும் மரம். இதன் சிறப்புப்பற்றி, இந்திரன் நாட்டைக் கற்பக நாடு என்று கூறுகின்றனர். கற்பகத்தரு கனி தருவது போலத் திருவருளை நல்குவதால் சிவபரம் பொருளை “அருள் பழுத்தோங்கும் கற்பகத் தருவே” என்று கூறுகின்றார். மலைகளிலும் குன்றங்களிலும் உள்ள செடி கொடிகளில் மருந்தாவன பல வுண்மை பற்றி, “அருள் மருந்து ஒளிர் குணக் குன்றே” எனவும், சலியாமை கண்டு குணங்களைக் குன்று எனவும் உரைக்கின்றார். திருவள்ளுவரும் “குண மென்னும் குன்று” என்பது காண்க. கடலிடத்தே தேவர்கட்கு அமுதம் கிடைத்தது போலச் சிவத்தின்பால் திருவருள் கிடைப்பது உணர்த்த “அருள் எனும் அமுதம் தரு பெருங் கடலே” எனப் புகழ்கின்றார். விளக்கொளியினின்று பரவும் கதிர்களைப் போலச் சிவத்தினிடம் ஞான வொளிக் கதிர் எழுந்து பரவுவது புலப்பட, “அருட் கிரணம் கொளும் சுடரே” என இயம்புகிறார். மணிகட்கு ஒளி யுண்மையால், “அருளொளி வீசும் அரும் பெறல் மணியே” என அறிவிக்கின்றார். கரும்பின் பாகு, தேன் பாகு ஆகியவற்றிற் பெறப்படும் சுவை போலச் சிவஞானம் திருவருட் சுவையை நல்குவதால், “அருட் சுவை கனிந்த செம்பாகே” எனப் போற்றுகின்றார். நன்கமைந்த செந்நிறமாக இருத்தலால் “செம்பாகு” என்று உரைக்கின்றார். அழகிய மலர்களில் இனிய மணம் நிலவுதல் போலச் சிவத்தின்பால் அருள் மணம் நிலவுகிறதென்பார், “அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே” எனக் கூறுகின்றார். அருவாகிய பரசிவன் உருக் கொள்ளுமிடத்து அருளே தனக்குத் திருவுருவாகக் கொள்ளுகிற தென்பாராய், “அருள் மயமாம் பரசிவமே” எனப் பகர்கின்றார்.

     இதனாற் பரசிவத்தின் நலம் பலவும் எடுத்துரைத்தவாறாம்.

     (3)