2800. திருநெடுமால் அயன்தேடத் துரியநடு
ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே
இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
அருவுருவங் கடந்ததுபேர் ஆனந்த
வடிவதுநல் அருள்வாய்ந் துள்ள
திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர்
நடராசன் என்ப தம்மா.
உரை: திருவொடு கூடிய திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காண முயலா நிற்க, துரியத்தின் நடுவின்கண் மறைந்திருந்தது என மெய்ப்பொருள் தெளிந்தோர் சொல்லுகின்ற ஒப்பற்ற திருவருள் மருந்து திருச்சிற்றம்பலத்தே இருக்கக் கண்டு உவகையுற்றேன்; அஃது எவ்வியல்பை யுடையது எனின், அருவுருவ மென்னும் நிலைக்கு அப்பாற்பட்டது; பேரானந்த வடிவமானது; நல்லருள் வாய்க்கப் பெற்றது; உயிர்கட்கு இம்மை மறுமை என்ற இருமைக்கும் நலம் செய்வது; எல்லாம் செயல் வல்லது; திருப்பெயர் நடராசன் எனப்படுவதாம். எ.று.
நெடுமால் திருமகளோடு கூடி யிருப்பவனாதல் விளங்கத் “திருநெடுமால்” எனக் கூறுகின்றார். தாணுவாய் நின்ற சிவத்தின் அடி முடிகளை முறையே காணும் பொருட்டு மாலும் பிரமனும் முயன்றனர் எனப் புராணம் கூறுவதன் பொருள் யாதென ஆராய்ந்த அறிஞர்களிற் சிலர், அவர்கள் தேடியபோது துரிய நடுவே நின்றமையின் அவ்விருவரும் காணாராயினர் எனக் கூறினர்; அதனால், “நெடுமால் அயன் தேடத்துரிய நடு ஒளித்ததெனத் தெளிந்தோர் சொல்லும் ஒரு கருணை மருந்து” என உரைக்கின்றார். துரிய நடு - உந்தியின் நடுநிலை; கீழாலவத்தையில் ஆன்மா சுழுத்தித் தானமாகிய இதயத்தின் நீங்கி உந்தியிற் சென்றணைவது துரியாவத்தை; அங்குப் பிராண வாயுவும் புருடத்துவமுமாகிய இரு கருவிகளோடே கூடியிருத்தலால் அங்கு ஆன்மாவுள் ஒடுங்கியிருக்கும் சிவம் உணரப்படாது என்பது பற்றி, “துரிய நடு ஒளித்ததெனத் தெளிந்தோர்” சொல்வதைக் கொண் டுரைக்கின்றார். புருடத்துவம் - பும்ஸ்துவ மலம் எனவும் கூறப்படும். உணர்வுருவாகிய, ஆன்மாவுக்கு அங்கே உணர்த்தும் கருவியில்லாமையால் “ஒளித்தது” எனச் சொல்லுகின்றார்கள். இறைவனை “மருந்து” என்று உரைப்பதால் அருளே அவற்குத் திருமேனியாதல் பற்றிக் “கருணை மருந்து” என்று கூறுகின்றார். தில்லையம்பலத்தில் கூத்தப் பிரான் உருவிற் கண்டு இன்புற்றது கூறுவாராய், “அம்பலத்தே யிருந்திடக் கண்டு உவந்தேன்” என வுரைக்கின்றார். பொருள்கட்குரிய உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைக்கும் அப்பாற் பட்ட தென்றற்கு “அருவுருவம் கடந்தது” என்றும், ஆனந்தமும் அருளும் திருமேனியாகக் கூறப்படுவது பற்றி, “பேரானந்த வடிவாய் அருள் வாய்ந்தது” என்றும் இசைக்கின்றார். நன்கு - நன்மை. இருமை - இம்மை மறுமை என்பன.
இதனால், அம்பலத்தாடும் பெருமானது இயல் நலம் உரைத்து நடராசன் எனப் பெயர் கூறப்படும் திறம் கூறியவாறாம். (2)
|