பக்கம் எண் :

21

21. திருவருள் விலாசம்

 

      அஃதாவது, இறைவனின் திருவருள் விளையாட்டுத் திறத்தைக் கூறுவது. விலாசம் - விளையாட்டு.

 
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2801.

     ஆண்டவன்நீ ஆகில்உனக் கடியனும்நான் ஆகில்
          அருளுடையாய் இன்றிரவில் அருள்இறையாய் வந்து
     நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
          நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
     வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
          விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
     தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
          தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.

உரை:

     கூத்தப் பெருமானே, அருட் சபையிற் காட்சிதரும் தனி முதல்வனே, பெரிய அருட் கடலே, மிக்க தகுதி கொண்டவனே, சங்கரனே, சிவனே, என்னை ஆண்டவன் நீயாயின், உனக்கு நான் அடியவனாயின், அருளுடையவனாகிய நீ இன்றிரவு எனக்கு அருள் ஞானம் நல்கும் குருவாய் வந்து, திருமால் முதலிய தேவர்களாலும் காண்பதற்கரிய பரம்பொருளாகிய உனது உண்மை நிலையையும் அடிமுடியறியும் நெறியையும் உணர்த்தி, வீண் தவம் புரிவோய், காலையில் கண்விழித்தவுடன் எழுந்திருந்து கடன்களை முறைப்படி முடித்துக் கொண்டு இதனைச் சிந்தித்தலைச் செய்க; யாவும் இனிது விளங்கும் என அறிவித்தருள்வாயாக. எ.று.

     தாண்டவம் - கூத்து; திருக்கூத்தாடும் பெருமானைத் “தாண்டவனே” எனப் புகழ்கின்றார். அருட்பொது, அருள் ஞானசபை. சபையைப் பொது வென்பது வழக்கு. “தில்லையுட் கோலமார் தரு பொது” (கீர்த்தி) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. ஒப்பு வேறு கூறலாகாத முதல்வனாதல் விளங்கத் “தனி முதல்” என்கிறார். தடங் கடல் - பெரிய கடல். நெடுந்தகை - மிக்க தகுதி கொண்டவன். “நெடுந்ததை நீ என்னை யாட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேன்” (நீத்தல்) என மணிவாசகனார் உரைப்பது காண்க. சங்கரன் - சுகத்தைச் செய்பவன். ளுனக்கும் எனக்குமுள்ள உறவு ஆண்டானுக்கும் அடிமைக்குமுள்ளதாமாயின், யான் வேண்டுவதை அருளுக என்பாராய், “ஆண்டவன் நீ யாகில் அடியனும் நானாகில் அருளுடையாய்” எனக் குறித்து மொழிகின்றார். இறை - ஞானாசிரியன். நீண்டவன் - திருமால். வாமனனாய்த் தோன்றித் திரு விக்கிரமனாய் உயர்ந்தமையின், திருமாலுக்கது பெயராயிற்று. மனத்தாலும் நினைத்தற்கு அரிதாம் என்பதுணர்த்தத் “தீண்டரிதாம் பொருளின் நிலை” என்று உரைக்கின்றார். “மனத்தினும் தீண்டேன்” (திருநீலகண்டர்) எனச் சேக்கிழார் கூறுவர். பொருளின் நிலை - சிவபரம் பொருளின் பரமாம் தன்மை. அடி முடியின் நெறியாவது, சிவப்பேற்றுக்குரிய ஞான நெறி. நிலை யுணர்ந்து அடையும் நெறியை முற்றவும் கண்டு சிந்திப்பாயாக என்றும், அதுதான் திருவருள் ஞானத்தை உனக்கு விளங்கச் செய்யும் என்றும் சொல்லுவாராய், “தீண்டரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டிக் காலையில் எழுந்து புரிதி, இது விளங்கும் எனப் புகல்வாய்” என்று கூறுகின்றார். பயனில்லாத முயற்சி செய்பவன் வீண் தவன். ஞான முயற்சிக்குரிய காலத்தை விளக்குதல் வேண்டிக் “காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்துப் புரிதி” எனவும், புரிந்தால் தவப் பயன் என்பார், “இது விளங்கும்” எனவும் இயம்புகின்றார். “தானக்கமலத் திருந்த சதுமுகன் தானக் கருங்கடலூழித் தலைவனும், ஊனத்தினுள்ளே உயிர்போலுணர்கின்ற, தானப் பெரும்பொருள் தன்மைய தாமே” (377) எனத் திருமந்திரக் கருத்தையுட்கொண்டது.

     இதனால், சிவஞானப் பேற்றுக்குரிய பொருளும் நெறியும் காலமும் பயனும் உரைத்தவாறாம்.

     (1)