பக்கம் எண் :

2805.

     நித்தி யம்பரா பரநி ராதரம்
          நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
     சத்தி யம்கனா கனமி குந்ததோர்
          தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
     வித்தி யஞ்சுகோ தயநி கேதனம்
          விமலம் என்றுநால் வேத முந்தொழும்
     சித்தி யங்குசற் கனசி தம்பரம்
          சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

உரை:

     சிவ சிதம்பரம் என்றும் உள்ளது; எல்லாவற்றிலும் மேலுங்கீழுமாயது; யாதோர் ஆதாரமு மில்லாதது; எப்பொழுதும் நிலையாயிருப்பது; உருவ மில்லாதது; உண்மையானது; பெரியதிற் பெரியதும் சிறியதிற் சிறியது மாவதொரு தற்பரம்; சிவம்; சமரசத் தன்மையுடையது; வித்தை வடிவமானது; எல்லாச் சுகங்களும் தோன்றும் இடமாவது; மலமில்லாதது என்று நான்மறைகளும் தொழுகின்ற, ஆன்மாக்களாற் சூழப் பெற்ற பெரிய ஞான நிலையமாம் சிதாகாசமாகும். எ.று.

     மேன்மைக்கும் கீழ்மைக்கும் எல்லையாவது சிவம் என்றற்குப் “பராபரம்” எனப்படுகிறது. உலகிலுள்ள உயிர்கட்கு உலகம் போலவும், ஆன்மாக்கட்குச் சக்தி போலவும் ஆதார முடையதன்று என்றற்கு. “நிராதரம்” எனப்படுகிறது. குண தத்துவத்தைக் கடந்ததாகலின், “நிர்க்குணம்” எனப்படுகிறது. நிட்களம் - உருவமில்லாதது. கனாகனம் - கனம் அகனம் எனப் பிரியும். பெருமையும் சிறுமையும் எனப் பொருள் படும். தற்பரம் - தனக்குத் தானே மேலாவது. சமரசத்துவம் - எல்லாவற்றையும் ஒப்ப நோக்குந் தன்மை. வித்தியம் - வித்தை வடிவானது. நிகேதனம் - இடம். நிலயம் என்றுமாம், சித்து - ஆன்மாக்கள். சித்தியங்கு சிதம்பரம் என்பதற்கு எல்லாச் சித்துக்களையும் இயக்கும் முதல்வன் இருக்கும் சிதம்பரம் என்று கூறுவதுண்டு.

     (3)