பக்கம் எண் :

23

23. சிவகாமவல்லி துதி

 

      அஃதாவது, தில்லைச் சிவகாமி யம்மையைத் துதித்துப் பாடும் சொன்மாலையாம்.

 

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2808.

     அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
          அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
     இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
          என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
     உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
          ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
     திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
          சிவகாம வல்லி எனும் தெய்வத்தாயே.

உரை:

     சிவகாமி என்று புகழப்படும் தெய்வத் தாயே, தீவு போன்ற மனத்தைச் சூழ்ந்துள்ள மாயை யென்னும் கடலின் ஆழம் தெரியாமல் இறங்கி அதனுள் அழுந்துகின்றேனாதலால், என்பால் இரங்கியருள மாட்டாயோ? பிற வுயிர்களின்பால் சிறிதும் இரக்கமில்லாத என்னுடைய மனம் போல்வதா நினது திருவுள்ளம்? இறைவியாகிய திண்மை பொருந்திய உனது அருளரசை நடத்தும் செங்கோல் கொடுங்கோலாயின் யான் எங்கே போய் எவரிடம் என் குறையை யுரைப்பேன்; நிலையறியாப் பிள்ளை யென்பது கொண்டு பிள்ளையைத் தாயார் கைவிடுவதில்லை - காண். எ.று.

     சிவகாம வல்லி, சிவத்தின்பால் பெருங் காதலுற்றுப் பிரியா துறையும் கொடிபோன்ற உமையாகிய நங்கை. காமர் வல்லி என்பது காமவல்லி என வந்ததாகக் கொள்வதுமுண்டு. வல்லி - பசுமையான கொடி; இக்கொடி போல்வதால், சிவகாமவல்லி என்று கூறுகின்றார். இதனையே சுருக்கிச் சிவகாமி என்று நாட்டவர் வழங்குவர்; சிவத்தைக் காமுற்றிருப்பவள் என்பது இதன் பொருள். உலக மக்களினத்துத் தாயின் வேறுபடுத்தற்குத் “தெய்வத் தாயே” எனக் கூறுகின்றார். இதற்கே, மக்களுயிர்க்கே யன்றித் தெய்வங்கட்கும் தாயாகியவள் என்றும் பொருள் காண்பர். அரங்கம் - நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலம்; ஆற்றிடையும் கடலிடத்தும் காணப்படும் இதனைத் தீவு எனவும், தீவ மெனவும் சான்றோர் வழங்குவர். அளப்பரிய மாயையினிடையே மனம் இருத்தலால், மாயையைக் கடலென்றும், மனத்தை அரங்கமென்றும் உருவகம் செய்கின்றார். அளக்கர் - கடல். அளப்பரிய ஆழமும் அகலமும் உடைமைபற்றி கடல், அளக்கரெனப் படுகிறது. நீர் நிலைக்கண் இறங்குவோர் ஆழம் காணாமல் இறங்குதல் கூடாது; இறங்கின் அழுந்தித் துன்புறுவர் என்பது குறிப்பு; யானும் அவர்களைப் போல் ஆழ மறியாமல் இறங்கி அழுந்தி வருந்துகிறேன் என்பாராய், “ஆழ மறியாமற் காலிட்டு இரங்கி அழுந்துகின்றேன்” என வுரைக்கின்றார். “கரை நின்றவர் கண்டு கொளென்று சொலி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்” (அதிகை) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. எனது துன்ப நிலை கண்டும் மன மிரங்காம லிருக்கின்றாயே என வருந்துகின்றாராதலால், “இரங்காயோ” என்று கூறுகின்றார். பிறர் துயர் கண்டு சிறிதும் இரங்காத பண்பு எனக்குத்தான் உண்டு; உனக்குமா மனம் இரங்குவதில்லை என முறையிடுபவர், “சிறிதும் உயிர் இரக்கமில்லா என் மனமோ நின் மனமும்” எனக் கேட்கின்றார். இறைவி, எங்கும் பரந்து இருப்பவள். எங்கும் இருந்து எவ்வுயிர்க்கும் இரங்கி அருட் செங்கோல் நடத்துபவளாகிய நீ என்பால் இரக்கம் கொள்ளாமை கொடுமை என்பாராய், “உன்றன் அரசியற் கோல் கொடுங்கோ லானால்” என்றும், உன்னுடைய செங்கோல் கோடுமானால், எங்கோடி யுயிர் பிழைப்பேன் என்பாராய், “ஓடி எங்கே புகுந்து எவர்க்கும் உரைப்பதம்மா” என முறையிடுகின்றார்.

     இதனால், நினது அருணீழ லொழிய எமக்கு உறுதி தரும் புகலிடம் இல்லை யென்பதாம்.

     (1)