281. மன்னும் குவளை ஈயாரோ
மதவேள் மதத்தைக் காயாரோ
இன்னும் கோபம் ஓயாரோ
என்தாய் தனக்குத் தாயாரோ
துன்னும் இரக்கம் தோயாரோ
துகளேன் துயரை ஆயாரோ
பன்னும் வளங்கள் செறிந்தோங்கும்
பணைகொள் தணிகைத் தூயாரே.
உரை: உலகவரால் சொல்லப்படும் வளங்கள் யாவும் மிகுந்து ஓங்கும் மருத நிலம் கொண்ட தணிகைப் பதியில் எழுந்தருளும் முருகப் பெருமானாகிய தூயவர் தமது பெரிய குவளை மாலையை எனக்குக் கொடுக்க மாட்டாரா; மன்மதனுடைய சேட்டையை ஒழிக்க மாட்டாரா; இன்னமும் என் மேல் கொண்ட கோபத்தை நீக்க மாட்டாரா; என்னுடைய தாய்க்குத் தாயாவாரோ; தம்பால் பொருத்தி யுள்ள இரக்கப் பண்பை மேற் கொள்ள மாட்டாரா; குற்றமுடைய என் துயரத்தை எண்ணிப் போக்க மாட்டாரா; யான் என் செய்வேன், எ.று.
குவளைப் பூக்களால் தொடுக்கப் பட்ட மாலையை அணிந்து கொள்பவனாதலால் அம்மாலையைத் தனக்கு அளித்தலால் தன் வேட்கை வெம்மை தணியும் என்னும் கருத்தினளாகிய நங்கை, “மன்னும் குவளை ஈயாரோ” என்றும், “மதவேள் மதத்தைக் காயாரோ” என்றும் உரைக்கின்றாள். குவளை மாலை தணிகை முருகனுக்குச் சிறப்பு மாலையாகும். மதவேள் - மன்மதன். மக்கள் உள்ளத்தில் காமவிச்சையை எழுப்பும் செயலின னாதலால் அதற் கேதுவாகிய அவன் இயல்பை, “மதம்” என்று கூறுகின்றார். காய்தல் - போக்குதல். தனக்கு அருள் புரியாமை நினைந்து அதற்கு காரணம் அப்பெருமானுக்குத் தன்பால் உளதாகிய கோபம் என்று நினைக்கின்றாராதலால், “இன்னும் கோபம் ஓயாரோ” எனவும், தனது நிலைமையும் சொல்லும் கண்டு கடிந்து நிற்கும் நற்றாயின் கோபம் நினைவுக்கு வருதலின் தன் தாயினும் முருகப் பெருமான் கொண்டுள்ள கோபம் பெரிதாக வுள்ளது என்றற்கு, “என் தாய் தனக்குத் தாயாரோ” எனவும் வெருவுகின்றாள். இரக்கமே வடிவினனாதலால் “துன்னும் இரக்கம்” என்று சிறப்பித்து அவ்விரக்கப் பண்பு மிக்குடையவரானால் தன் மேலும் இரக்க முடையவராவார்; அதனால் தனது குற்றங்களால் தனக்குண்டாகும் மனநோய் நீங்கும் என்பாராய்த் “துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ” என்று சொல்லுகின்றாள். துகள் - குற்றம்.
இதனால், முருகன்பால் ஒருதலைக் காம வேட்கை கொண்ட நங்கை ஒருத்தியின் தீரா மனநோயைத் தெரிவித்தவாறாம். (10)
|