2810. திருவே திகழுங் கலைமகளே
திருவே மலையான் திருமகளே
உருவே இச்சை மயமேமெய்
உணர்வின் வணமே உயர்இன்பக்
குருவே ஆதித் தனித்தாயே
குலவும் பரையாம் பெருந்தாயே
மருவே மலரே சிவகாம
வல்லி மணியே வந்தருளே.
உரை: திருவருள் ஒளி நிலவும் கலைமகளே, திருமகளே, மலையரையன் பெற்ற தலைமகளே, அழகின் உருவமே, இச்சை மயமானவளே, மெய்ஞ்ஞானத்தின் வடிவமே, உயிர்கட்கு இன்ப முணர்த்தும் குருமூர்த்தமே, ஆதி முதல்வியாகிய தாயே, சிவத்தின்கண் நிலவும் பராசத்தியாகிய பெரிய தாயே, நறுமணம் கமழும் தெய்வமலர் போன்றவளே, சிவகாம வல்லியே, மரகத மணியே, எளியேன் முன் எழுந்தருள்வாயாக. எ. று.
திருவே என்பது திருவருளைக் குறிப்பது. அருளொளி செய்யும் திருமேனியை யுடையவ ளென்றற்குத் “திருவே திகழும் கலைமகளே” எனச் சிறப்பிக்கின்றார். திருவைத் திருவருள் ஞான மெனினும் பொருந்தும். பின்வரும் திருவென்பது செல்வம். திருமகள் என்றவிடத்துத் திரு தலைமை மேற்று. படைத்தல் முதலிய முத்தொழிற்குரிய மூர்த்தங்களாகிய பிரமன் திருமால் உருத்திரன் மூவர்க்கும் சத்தியாதலால் கலைமகள் முதலிய மூவரையும் எடுத்து மொழிகின்றார். மகளிரினத்தில் தலையாய அழகுடையவள் உமையம்மையாதலால், “உருவே” என்று உரைக்கின்றார். இறைவனுக்கு இச்சா சத்தியாதல் பற்றி “இச்சை மயமே” என்று இயம்புகின்றார். ஞான சத்தி யென்றற்கு “மெய்யுணர்வின் வணமே” என வுரைக்கின்றார். வண்ணம் வணமென வந்தது. மெய்ஞ்ஞான இன்பப் பேற்றுக்கு நெறி காட்டி இயக்கும் தேவியாதலால், “உயரின்பக் குருவே” என்று உரைக்கின்றார். இறைவனொடு கூடி உலகுபடைத்த முதலன்னை யாவது விளங்க, “ஆதித் தனித் தாயே” எனவும், பரம்பொருட்குச் சக்தி யெனப்படுதலாற் “பரை” எனவும் பகர்கின்றார். பராசத்தி இச்சை ஞானக் கிரியா சத்தியாய்ப் பிரிந்து இறைவனைத் தொழிற் படுத்தும் திறம் புலப்பட, “பரையாம் பெருந்தாயே” எனவும் இசைக்கின்றார். “பரந்த பராபரை ஆதி பரனது இச்சை பரஞானம் கிரியை பரபோக ரூபம் தரும் கருணை யுருவாகி” (சிவப்) இலங்குபவள் என உமாபதி சிவனார் உரைப்பது காண்க. திருமேனி ஞான மணம் கமழ்வது பற்றி, “மருவே மலரே” என்கின்றார். பார்வதியின் மேனி வண்ணம் மரகத மணி போல்வதால், “மணியே” என ஓதி மகிழ்கின்றார்.
இதனாற் சிவகாம வல்லியின் உருநலம் வியந்து கூறியவாறாம். (3)
|