பக்கம் எண் :

கட

கட்டளைக் கலித்துறை

2812.

     தருவாய் இதுநல் தருணங்கண்
          டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
     குருவாய் விளங்கு மணிமன்ற
          வாணனைக் கூடிஇன்ப
     உருவாய்என் உள்ளத்தின் உள்ளே
          அமர்ந்துள்ள உண்மைஎலாம்
     திருவாய் மலர்ந்த சிவகாம
          வல்லிநின் சீர்அருளே.

உரை:

     தளர்ந்த என்னைத் தாங்கி யருளும் குருபரனாகிய மணியிழைத்த அம்பலவாணனைச் சேர்ந்து இன்ப வுருவாய் என் மனத்தின் கண் எழுந்த ருளி, உண்மை ஞானப் பொருள் பலவும் எடுத்துரைக்கும் சிவகாம வல்லியே, நினது சிறப்புடைய திருவருளொளியை, இது நல்ல சமயமாவது கண்டு தந்தருளுவாயாக. எ.று.

     இடர் வரினும் மெய் தளரினும், நோய் உறினும் வேண்டுவன தந்து உதவுபவன் குரு முதல்வன் என்பதனால், “என்னைத் தாங்கிக் கொண்ட குருவாய் விளங்கும் மணிமன்ற வாணன்” என்று புகழ்கின்றார். தாங்குதல் கூறவே, இடர் முதலிய ஏதுக்கள் பெய்துரைக்கப்படுகின்றன. மணி மன்றம் - மணிகள் இழைத்த பொற் சபை. சத்தியொடு சேர்ந்தாலன்றிச் சிவம் செயல்படாமை புலப்பட, “மன்ற வாணனைக் கூடி இன்பவுருவாய் என் உள்ளத்தினுள்ளே யமர்ந்து” என வுரைக்கின்றார். உள்ளம் - மனம். உயிர்க் குயிராதலின், உயிரை யுள்ள மென்கிறார் எனினும் பொருந்தும். உண்மையெல்லாம் எனப் பன்மையிற் கூறுதலால், உண்மை ஞானப் பொருள்கள் பலவாதல் அறியலாம். திருவாய் மலர்தல் - சொல்லுதல். சீர் அருள் - சிறப்புடைய திருவருள் ஞானம். உயிர் உடலொடு கூடி உணர்வு தெளிவுற நிற்கும் காலம் அரிதென்பது தோன்ற “இது நல்தருணம் கண்டாய்” என எடுத்தோதுகின்றார்.

     இதனால், திருவருள் ஞானம் வழங்குதற்கு இது காலம் எனத் தெரிவித்தவாறாம்.

     (5)