பக்கம் எண் :

2814.

     களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்
     வளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்
     விளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு
     துளங்கு றாநலந் தோற்றலின் விச்சுல கருத்தன்.

உரை:

     களங்கம் பொருந்திய அக்குண வெல்லையைக் கடந்தவனாதலால் சிவன் குணாதீதனாம்; வளம் பெற விளங்கும் உலகங்கள் யாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் விளக்க முடைய விசுவ வியாபியாவான்; இவை யனைத்தையும் ஆண்டருளி நலம் செய்வதால் விசுவகருத்தனாம். எ.று.

     மிகுதலும் குறைதலும் ஏறுதலும் இறங்குதலுமாகிய குறை யுடையவையாதலால், குணங்களை “களங்க வக்குணம்” என வுரைக்கின்றார். பிரகிருதி மாயையின் காரியமாதல் பற்றி, “களங்கமுடைய குணம்” என மொழிகின்றார் எனினும் பொருந்தும். குண தத்துவ எல்லைக்கு அப்பாலும் இருத்தலால் “குணாதீதன்” என்று குறிக்கின்றார். உலகில் வளம் பலநாளும் பெருகா நிற்பதுபற்றி, “வளங் கொளத்தகும் உலகு” என ஓதுகின்றார். உலகனைத்தினும் அணுப் புதைக்கவும் இடமின்றிக் குறைவறக் கலந்து நிற்பதால், சிவத்தை “விசுவ வியாபி” என்று விளம்புகின்றார். சிந்திப்பார் சிந்தனையில் இனிது தெரிவது கொண்டு “விளங்கு விசுவ வியாபி” என விசேடிக்கின்றார். உலகனைத்தையும் முறை திறம் பாத படி இயக்கி வாழும் உயிர்கட்கு நலம் எய்த அருளுவதால், பரமனை “விசுவகருத்தன்” எனக் குறிக்கின்றார். கர்த்தா என்னும் வடசொல் கருத்தன்” எனத் தமிழலாயிற்று.

     இதனாற் குனாதீதனாகிய பரசிவன், விசுவ வியாபியும் விசுவ கர்த்தாவுமாவன் என விளம்பியவாறாம்.

     (2)