பக்கம் எண் :

2815.

     வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
     பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
     ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
     செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.

உரை:

     தேவர்களே, வெம்மை யுடையனாய் உலகனைத்தையும் அழித் தொடுக்குவது கண்டு சிவனை, விசுவ சங்காரி என்பர்; மேலாயுள்ளவற்றிற் கெல்லாம் மேற் பொருளாதலால் பராபரனாம் என்று பெரியோரால் புகழ்ந் தோதப்படும் அப் பரமன், செம்மைத் திருமேனியையுடைய சிவபிரான்; அவன்என்றும் உள்ள ஒருவன் எனவுணர்ந்து அன்பு செய்வீர்களாக. எ.று.

     உருத்திர மூர்த்தம், வெம்மையே உருவாயதாகலின், “வெய்யனாய்” எனவும், மாயையினின்றும் படைத் தளிக்கப்பட்ட உலகத்தை உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு மீள அம்மாயையில் ஒடுக்குதலால், அவனைச் சங்கார மூர்த்தி என்பது புலப்பட, “உலகழித்தலின் விசுவ சங்காரி” எனவும் விளம்புகின்றார். காத்தலிற் போலத் தண்ணியனாயின், அழித்தற்றொழில் நடவாதென அறிக. மேன் மேலாகிய தலைவ னென்றற்கு “மேலா மையனாதலின் பராபரன்” என்று கூறுகின்றனர். செய்யன்-சிவந்த மேனியை யுடையவன். செய்ய மேனியனே பட வரவக்கச்சையனே” (நீத்தல்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. அமரர்-தேவர்கள். அமரீர் என விளியேற்றது. சாகாமை வேண்டிப் பல தெய்வங்களைப் பரவும் பண்பினராகலின் தேவர்களை நோக்கிக் கூறுகின்றார்.

     இதனாற் சிவபிரான் விசுவ சங்காரியும் பராபரனுமாகும் ஒருவன் என்பது உணர்த்தியவாறாம்.

     (3)