25. நடராச அலங்காரம்
அஃதாவது, தில்லைப்பெருமானின் திருக்கூத் தெழிலைச் செப்புவது.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 2817. இரண்டே காற்கை முகந்தந்தீர்
இன்ப நடஞ்செய் பெருமானீர்
இரண்டே காற்கை முகங்கொண்டீர்
என்னே அடிகள் என்றுரைத்தேன்
இரண்டே காற்கை முகம்புடைக்க
இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
இரண்டே காற்கை முகங்கொண்டாய்
என்றார் மன்றில் நின்றாரே.
உரை: தோழி, பிச்சைத் தேவர் வந்த போது, மன்றில் நின்றார் - தில்லைச் சபையின்கண் நின்று; இன்ப நடஞ்செய் பெருமான் - உயிர்கட்கு ஞான வின்பம் நல்கும் நடனத்தைச் செய்கின்ற பெருமானாயினீர்; இரண்டே காற் கை முகம் தந்தீர் - இரண்டே கால்களையுடைய மக்களினத்துக்கு ஒரு முகமே தந்திருக்க; அடிகள் - அடிகளே, இரண்டே காற்கு ஐம்முகம் கொண்டீர் - இரண்டு கால்களும்ஐந்து முகங்களும் கொண்டிருக்கின்றீரே; என்னே என்றுரைத்தேன் - இஃது என்ன விபரீதம் என்று சொன்னேனாக; இரண்டே கால் - இரு காலும் ஊன்றி நின்று; கை முகம்புடைக்க - கையில் முகம் அழுந்திப் புடைக்கச் சாய்ந்திருந்தாய்; எனைக்கு என்று - எதற்காக என்று அவர் கேட்க; இரண்டே கால் கைமுகம் கொண்டாய் - அரையிற் கையூன்றிக் கொண்டு மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கினாய் என மொழிந்தார், காண். எ.று.
அம்பலத்தில் இறைவன் நின்றாடும் திருக்கூத்து மக்களுக்கு இன்ப வாழ்வு உண்டாகும் பொருட்டு டென்பது பற்றி, “மன்றில் நின்றார்” எனவும், “இன்ப நடஞ்செய் பெருமான்” எனவும் உரைக்கின்றார். ஐம்முகன் - ஐந்து முகம்; ஈசானம், தற்புருடம், சத்தியோசாதம், அகோரம், வாமம் என ஐந்தாம் என்க. இரு காலில் நின்று கொண்டு ஒரு கையில் முகத்தை வைத்துக் கொண்டிருப்பதால் முகத்தசை கையில் அழுந்திப் புடைத்துத் தோன்றுவது கண்டு, “இரண்டே காற்கை முகம் புடைக்க இருந்தாய்” என்றும், அது வியப்பைத் தந்தமையின் “எனைக்கு” என்றும் கேட்கின்றார். என்னை என்ற்பாலது “எனைக்கு” எனக்குச் சாரியை பெற்றது. கேட்க என ஒரு சொல் வருவிக்க. இரண்டு கால் - அரை; அஃதாவது இடை. இடையிற் கையை யூன்றி முகம் மலர்ந்து நோக்கினமை விளங்க, “முகம் கொண்டாய்” என்று மொழிகின்றார். இதற்கு வேறு பொருள் கூறுவாரு முண்டு.
இதனால், பெருந்திணை நங்கையின் மனைக்குப் போந்த பிச்சைத் தேவரோடு அவள் முகம் புரிந்து இன்னுரை யாடியதாம். (1)
|