பக்கம் எண் :

2818.

     இரண்டே காற்கை முகங்கொண்டீர்
          என்னை உடையீர் அம்பலத்தீர்
     இரண்டே காற்கை முகந் தந்தீர்
          என்னை இதுதான் என்றுரைத்தேன்
     இரண்டே காற்கை முகங்கொண்டிங்
          கிருந்த நீயும் எனைக்கண்டே
     இரண்டே காற்கை முகங்கொண்டாய்
          னுன்றார் தோழி இவர்வாழி

உரை:

          அம்பலத்தீர் - தில்லையம்பலத்தில் உள்ளவரே; என்னையுடையீர் - என்னை அடிமையாக வுடையவரே; இரண்டே காற்கு - பிராணாயாமத்துக் குரிய பூரக இரேசகத்தின் பொருட்டு; ஐமுகம் கொண்டீர் - தலையாய யோக மவுன முகம் கொண்ட நீர்; இரண்டு கால் கை முகம் தந்தீர் - இரண்டே கால்களையுடைய விநாயக மூர்த்தத்துக்குக் கைபொருந்திய யானை முகத்தைத் தந்திருக்கின்றீர்; இதுதான் என்னை - இதற்குக் காரணம் என்னையோ என்று பிச்சைத் தேவரைக் கேட்டேனாக, இரண்டே கால் கை - இரண்டு கால்களும் இரண்டு கைகளும்; முகம் கொண்டு - ஒரு முகமும் கொண்டு; இங்கே இருந்த நீயும் - இவ்விடத்தே இனிதிருக்கின்ற நீ தானும்; எனைக் கண்டு - என்னைக் கண்டதும்; இரண்டு - உ; கால் - வ; கை - ; முகம் கொண்டாய் - பூத்த முகமுடையவளாயினாய் இஃது என்னை; என்று - எனச் சொல்லுகின்றார்; தோழி - ; இவர் வாழி - இவர் வாழ்வாராக. எ.று.

     பூரகம் - யோக நெறியில் மூச்சுக் காற்றை யுள்ளிழுக்கும் முறை; இரேசகம் - மூச்சுக் காற்றை வெளி விடும் முறை. வாங்கிய காற்றை அடக்குவது கும்பகம் எனப்படும். பூரக ரேசகங்களின்றிக் கும்பகத்துக்குச் சிறப்பின்மையால் பூரக இரேசகமே எடுத்துரைக்கப்படுகின்றன. யோகத்துக்கு மௌனம் தலையாயதாகலின், “ஐமுகம் கொண்டீர்” எனக் கூறுகிறாள். ஐ - தலையாய யோகத்தின் மேற்று. அம்பலம் - தில்லைச் சிற்றம்பலம். உயிரினத்தை அடிமையாக வுடையனாதலால் “என் உடையீர்” என வுரைக்கின்றாள். “திருவின் மிக்கார் யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்” (தடுத்) எனச் சேக்கிழார் கூறுவர். இரு கால்களே யுடைய விநாயக மூர்த்திக்கு நான்கு கால்களையுடைய யானையின் முகத்தைக் கொடுத்தது ஏன் என வினவுகின்றாளாகலின், ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. எம்மை வலம் வருதற்கு இரு காலும் தொழுதற்கு இரு கையும், போற்றிப் பரவுவதற்கு ஒரு முகம் கொண்டிருந்தும் நீ இங்கே இருந்தாய் என்பாராய், “இரண்டே காற் கை முகம் கொண்டு இங்கு இருந்தாய்” எனவும், எம்மைக் கண்ட பின்னரே முகத்தில் உவகை கொண்டாய், இஃது என்னை என்பாராய், “இரண்டே காற்கை முகம் கொண்டாய்” எனவும் உரைக்கின்றார். என்னை இங்ஙனம் திருத்தி நெறிப் படுத்தும் இவர் வாழ்க என்பாள் “இவர் வாழி” என வாழ்த்துகிறாள். திருத்திப் பணி கொள்ளுதல் இறைவற்கு இயல்பு; “திருத்தித் திருத்தி வந்து என் சிந்தை யிடங்கொள் கயிலாயா” (ஊர்த்) என நம்பியாரூரர் கூறுவது காண்க. இதற்கு வேறு பொருள் கூறுவாரும் உண்டு.

     இதனால் இறைவன் இனிய உரையாட்டால் நங்கையைத் திருத்திப் பணி கொண்டவாறாம்.

     (2)