பக்கம் எண் :

21. ஏழைமையின் இரங்கல்

        ஏழைமையின் இரங்கல் என்பது தம்பால் உள்ள ஏழைமை யுணர்ந்து அதனால் விளையும் நலக் குறைவுகளை நினைந்து வருந்துவதாகும். ஏழைமை - நல்லறிவு இல்லாமை. இப்பத்தின்கண் ஏழைமையால், தணிகை மலைக்குச் செல்லாமையும், அங்கே முருகப் பெருமானைக் கண்டு வழிபடாமையும், அடியார் கூட்டத்தில் சேராமையும், மகளிர் இன்பத்தில் மகிழ்ந்திருந்தமையும், பிறவும் உரைக்கின்றார். இதன்கண் ஒன்பது பாக்களே உள்ளன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

282.

    தேனே உளங்கொள் தெளிவே அகண்ட
        சிதம்மேவி நின்ற சிவமே
    கோனே கனிந்த சிவபோத ஞான
        குருவே விளங்கு குகனே
    தானே தனக்கு நிகராய் விளங்கு
        தணிகா சலத்தெம் அரசே
    நான்ஏழை இங்கு மனம்நொந்து நொந்து
        நலிகின்ற செய்கை நலமே.

உரை:

     தனக்குவமை யில்லாமல் விளங்குகின்ற தணிகை மலையில் எழுந்தருளும் எங்கள் அருளரசே, தேன் போன்றவனே, உள்ளத்தில் அமையும் தெளி பொருளே, அகண்ட ஞானாகாரத்தைப் பொருந்தி நிற்கின்ற சிவபரம் பொருளே, யாவர்க்கும் தலைவனே, நிறைந்த சிவநெறியை அறிவுறுக்கும் ஞானாசிரியனே, மெய்ம்மை விளக்கம் செய்கின்ற குகப் பெருமானே, நான் ஏழைமையால் இவ்வுலகில் மனம் மிகவும் வருந்தி மெலிவது நலமாகுமா? ஆகாதே, எ. று.

     முருகப் பெருமானுக்கு ஒப்பொருவரும் இல்லையாதலின் அவன் எழுந்தருளும் இடத்துக்கும் எய்துவதால், “தானே தனக்கு நிகராய் விளங்கும் தணிகாசலம்” என்று உரைக்கின்றார். சிந்திப்பவர் சிந்தையில் சிந்திக்குந் தோறும் தேனாய் இனிப்பதனால், “தேனே” என்றும், கலக்கமின்றி மனம் தெளிவுறும் போது தனது அருட்காட்சி வழங்குவதால், “உளங்கொள் தெளிவே” என்றும் கூறுகின்றார். அளக்க முடியாத ஞான நிலையை, “அகண்ட சிதம்” என்கின்றார். பரஞானவுருவாய் விளங்குவது பற்றி, “அகண்ட சிதமேவி நின்ற சிவமே” என்கின்றார். அகண்டம் - அளக்க முடியாதது. சிதம் - ஞானம். சிவபரம் பொருளின் கூறாதலால் முருகனைச் “சிவமே” எனக் குறிக்கின்றார். எவ்வுயிர்க்கும் தலைவன் என்பது பற்றிக் “கோனே” என உரைக்கின்றார். கனிதல் - நிறைதல். சிவபோத ஞான குரு - சிவபரம் பொருளின் பொதுவும் சிறப்புமாகிய இலக்கணங்களை அறிவுறுத்தும் ஞானாசிரியன். ஞானவான்களாலன்றிச் சிவநெறி உணர்த்தப் படாமை பற்றி, “ஞான குருவே” எனச் சிறப்பிக்கின்றார். அன்பர்களின் மனமாகிய குகைக் கோயிலில் எழுந்தருளுவதால் முருகனைக் “குகனே” எனக் கூறுகின்றார். ஏழைமை -அறிவில்லாமை. “நொந்து நொந்து” என்னும் அடுக்கு மிகுதி குறித்து நின்றது. உலக வாழ்வில் மக்கள் அறிவில்லாமையால் குற்றம் பல புரிந்து அடுக்கி வரும் துன்பங்களால் மெலிவது இயல்பாதலின், “நான் ஏழை இங்கு மனம் நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமே” என்று முறையிடுகின்றார். மனம் மெலிந்து செய்யும் செயல்கள் மேலும் மன நோய்க்கு ஏதுவாதல் உண்மையின், “நலிகின்ற செய்கை நலமே” என வருந்துகிறார். ஏகாரம், எதிர்மறை. ஓகாரம், எதிர்மறை.

     இதனால், ஏழைமையால் மனம் மெலிந்து செய்வது நலம் பயவாது என்று முறையிட்டவாறாம்.

     (1)