பக்கம் எண் :

26. பாங்கிமார் கண்ணி

    அஃதாவது, நங்கை தான் காதலித்த தலைவனாகிய நடராசப் பெருமானுடைய இயலிடம் எடுத்துத் தன்னுடைய ஆய மகளிர்க்கு உரைப்பதாம். சிந்து - முதலடி முச்சீரும் ஒரு தனிச் சீரும் பெற, இரண்டாமடி நீண்டு வருவது. அடியிரண்டிரண்டாகத் தொடுக்கப்படுவது கண்ணி. கண்ணி - பக்கத்துக் கொன்றும் இரண்டுமாக வைத்துக் கட்டும் பூ மாலைத் தொகுப்பு. பல கண்ணிகளையுடையது ஒரு மாலை; அது போல வரும் இச் சொல் மாலையும் கண்ணியெனப்படுகிறது. இனி வருமிடங்களிலும் இதனையே கூறிக் கொள்க. முச்சீருடையது சிந்தடியாகலின், இம்மாலை சிந்து எனக் குறிக்கப்படுகிறது. மகுடமாக வரும் சொல்லும் பொருளும் கொண்டு இக்கண்ணி பெயர் பெறும். பாங்கிமார், பக்கத்தே சூழ நிற்கும் ஆய மகளிர்; தோழியர் என்றுமாம். பாங்கியர்க் - குரைக்கப்படுதலின் பாங்கிமார் கண்ணி எனப்படுகிறது. தம்பியர் தம்பிமார் என்பது போலப் பாங்கியர் பாங்கிமார் என்று வழங்கும்.

சி்ந்து

2820.

     அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
     ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே.

உரை:

     தோழியர்களே, தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுகின்றார் என் தலைவராகிய சிவபெருமான்; அவருடைய கூத்தைக் கண்டு அவரையடைய விருப்பம் கொண்டேன்; ஆடுகின்ற திருவடியைக் கண்டு உற்ற ஆசையால் மனம் வாடுகின்றேன்; மேலும் இன்ப வுருவினராய்ச் சபையில்நின்று கூத்தாடுவதால் அவர்பால் நான் காதல் கொண்டேன். எ.று.

     ஆட்டம் - கூத்து. நாட்டம் - கருத்து. சேவடி - சிவந்த திருவடி. ஆசையுற்றதால் மனம் வாடி மேனி வேறுபடுகிற தென்பாராய் “வாடுகின்றேன்” என்று சொல்லுகிறாள். சபையின்கண் அவர் இன்பமே வடிவாய் நின்றமையால் நான் 'அவர்மேல் அன்பு கொண்டேன் என்றற்கு “இட்டம் வைத்தேன்” என்று கூறுகிறாள். இட்டம் - இஷ்டமென்ற வடசொல்லின் திரிபு.  

     (1,2,3)