283. நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர்
நவைஏக நல்கு தணிகா
சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து
தரிசிப்ப தென்று புகலாய்
நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம்
நிகழ்கின்ற ஞான நிறைவே
வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப
மயில்ஏறி நின்ற மணியே.
உரை: நிலவுலகில் வாழ்கின்ற சிவயோகியர் திருவுள்ளத்தில் பொருந்துகின்ற முழுத்த ஞானமே, வெற்றி பொருந்திய வேலேந்திய கையுடன் ஒளி செய்கின்ற தோகையை யுடைய மயில் மேல் இவர்ந்து வரும் மணி போல்பவனே, நற்பண்புடைய தொண்டர்களும் பிரமன் முதலிய தேவர்களும் துன்பம் நீங்க அருள் புரியும் தணிகை மலையில் வீற்றிருக்கின்ற உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வாயாற் புகழ்ந்து கண்களாற் கண்டு மகிழ்வது எப்பொழுது? சொல்லி யருளுக, எ. று.
சிவயோகர், சிவஞானச் செந்நெறியில் நின்று சிவமாம் தன்மை எய்தியவர். நிலவுலகில் பிறந்து வளர்ந்து சிவஞான முணர்ந்து செந்நெறியில் நின்று சிவயோகியராவது பற்றி அப்பெருமக்களை, “நில மேவுகின்ற சிவயோகர்” என்று சிறப்பிக்கின்றார். அவருள்ளம் சிவஞானம் நிறைந்திருத்தலால் அந்நிறைவின் கண் விளங்கும் ஞான மூர்த்தமாகிய முருகனைச் “சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே” என்று தெரிவிக்கின்றார். “அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர்” (வீழிமிழலை) என்று திருஞானசம்பந்தர் சிவயோகியர் இயல்பை உரைப்பது காண்க. வலம் - வெற்றி. முருகப் பெருமான் ஏறிவந்து தரும் காட்சி ஞானவொளி பரப்புவதாதலின், “ஒளிசேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே” என்கின்றார். மாணிக்க மணி போல் நிறமும் ஒளியும் உடையனாதலின், “மணியே” என்று புகழ்கின்றார். சிவத்தொண்டுக்குரிய உணர்வும் உரையும் செயலும் உடைமை தோன்ற, “நலமேவு தொண்டர்” என நவில்கின்றார். அயன் ஆதிதேவர் - பிரமன் முதலிய தேவர்கள். அவர்கட் குண்டாகும் துன்பங்களைப் போக்குவது அவர்கட்குத் தலைவனாகிய முருகனுக்கு கடமையாதலின் அவன் செயலை அவன் உறையும் தணிகை மலைமேலேற்றி, “நவை ஏக நல்கு தணிகாசலம்” என்று உரைக்கின்றார். தணிகை மலைக்குச் செல்வோர் அவன் திருப்புகழை ஓதிக்கொண்டு அவன் திருமுன் சென்று கண்களால் கண்டு மகிழ்வது மரபாதலால், “உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்பது” என்று இயம்புகிறார்.
இதனால் தணிகை முருகனைக் கண்டு மகிழ்வது எந்நாள் நிகழுமோ என்று ஏங்கியவாறாம். (2)
|