27. வெண்ணிலாக் கண்ணி
சிந்து
2847. தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
உரை: வெண்மையான நிலாவே, தனக்குத் தலைவனாகிய முதல்வனை யுணர்ந்து இன்பம் எய்துதற்கு நீ யோர் உபாயத்தை எனக்குச் சொல்லுக. எ.று.
உயிராகிய தன்னையும் தான் வாழும் உலகத்தையும் கண்டு இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பையும், இத் தொடர்பை யுண்டாக்கிய இறைவனாகிய முதல்வனுக்கும் உலகுயிர்கள்பால் அவனுக்குள்ள தொடர்பையும் எண்ணியறிதல் தன்னை யறிதலாகும். “தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை எமை இகழார்” (சிவ. போ) என மெய்கண்டார் கூறுவது காண்க. தன்னையறிந்த வழி உண்மை ஞானமும், எல்லா வுயிர்களையும் ஒக்க நோக்கும் சமரசவுணர்வும் தோன்றி இன்பம் விளைத்தலால், “இன்பமுற” எனக் குறிக்கின்றார். உலகியல் வாழ்க்கைத் தொடர்பு தன்னை யறிதற்குத் துணை புரியாது ஆன்ம வுணர்வை அலைப்பதால் “தந்திரம் நீ சொல்ல வேண்டும்” என வேண்டுகிறாள் நங்கை.
இதனால் தன்னை யுணரும் ஆன்ம ஞானம் நல்க வேண்டியவாறாம். (1)
|