2848. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
உரை: சிவ தத்துவத்துக்கு மேலே யுள்ள நிலவே, அவ்விடத்துக்கு வந்தடைய நானும் விரும்புகிறேன். எ.று.
சுத்த தத்துவத்தின் உச்சியிலிருப்பது சிவ தத்துவம்; இதனை நாதம் என்றும் நாத தத்துவ மென்றும் கூறுவர். இதற்கு மேல் உள்ளது நாதாந்தம்; முத்தி பெற்ற ஆன்மாக்கள் ஞான வுருவாகி அடையுமிடம். அது சிவபோகப் பெருவெளியாதலால் “அங்கே நானும் வரவேண்டுகின்றேன்” என உரைக்கின்றார்.
இதனால் சிவபோகப் பேற்றின்கண் தனக்குள்ள விழைவைத் தெரிவித்தவாறாம். (2)
|