பக்கம் எண் :

2852.

     போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
     போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.

உரை:

     ஞான வானின் நடுவே திகழும் வெண்ணிலவே, என்னை மறைக்கும் மல ஞானங்கள் கெட வேண்டுகிறேன். எ.று.

     மலப் போதம் - மலப்பிணிப்போடு கூடிய பசுபாச ஞானங்கள். பசு ஞானம் - உயிரறிவு. பாச ஞானம் - நூலறிவு. பசு - மலப் பிணிப்புடைய உயிர். பாசம் - இயற்கையும் செயற்கையுமாகிய மலப் பிணிப்பு. பசுபாச ஞான மற்றாலன்றிச் சிவஞானம் எய்தாமையால், “மலப் போதமற வேண்டுகின்றேன்” என விழைகின்றாள்.

     இதனால், சிவஞானப் பேற்றுக்குப் பசுபாச ஞானம் நீங்க வேண்டும் என்பதாம்.

     (6)