பக்கம் எண் :

2853.

     ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
     ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலாவே, யாரும் அறியாத நிலையில் திருவருள் ஞானத்தை எனக்குச் சிவபிரான் வந்து அருள் செய்வாரோ, கூறுக. எ.று.

     பசுபாச ஞானிகள் அறியின் சிவஞானம் அஞ்ஞான விகற்பமாக எண்ணப்படுமாகலின், சிவஞானம் பிறர் எவரும் அறியாவண்ணம் நல்கப் படுவது பற்றி, “ஆரும் அறியாமல் இங்கே அருளாளர் வருவாரோ” என வினவுகின்றாள். அருளாள ரென்பது சிவஞானத்தை நல்கும் சிவபிரான் மேற்று. “பர ஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க வருஞானம் பல ஞானம் அஞ்ஞான விகற்பம்” (சிவ. சித்தி.) என அருணந்தி சிவனார் கூறுவது காண்க.

     இதனால், சிவஞானம் எப்போது எய்துமென விரும்பியவாறாம்.

     (7)