பக்கம் எண் :

2857.

     ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
     ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, ஆதியாகிய பரம்பொருளே பிற அனைத்துக்கும் ஒடுங்குமிடமாம் எனச் சான்றோர் உரைக்கின்றனர் ஆதியாகும் அஃது அந்தமாவ தென்னையோ, சொல்லுக. எ.று.

     ஆதி - முதல்; அந்தம் - முடிவு. தன்னை யொழிந்த பிற யாவற்றையும் தோற்றுவிக்கும் முதற்பொருளாகும் சிவம் அவற்றை யொடுக்குவதாம் எனச் சிவஞானச் செல்வர்கள் உரைப்பதால், “ஆதி யந்தம் என்றுரைத்தார்” எனவும், தோற்றுவித்தற் கேதுவாகிய திருவருள் ஒடுக்குதற் கேதுவாவது யாங்ஙனம் என ஆசங்கிப்பாளாய், “அந்த ஆதி அந்தமாவதென்ன” எனவும் வினாவுகின்றாள். அந்தம் - முடிவு; ஒடுக்குதலுமாம். “அந்தம் ஆதி என்மனார் புலவர்” (சிவ. போ.) என மெய்கண்டார் கூறுவதுகாண்க.

     இதனால், ஆதியாய் உலகனைத்தையும் தோற்றுவிக்கும் முதற் பொருளே அந்தத்தைச் செய்வதாம் என்னும் உண்மையை வலியுறுத்தவாறாம்.

     (11)