பக்கம் எண் :

28. முறையீட்டுக் கண்ணி

    அஃதாவது, தாழிசைக் கண்ணிகள் வாயிலாக வடலூர் வள்ளற் பிரான் தமது வாழ்வில் மன மொழி மெய்களாற் செய்த குற்றங்களை எடுத்தோதித் தமக்கு இன்னருள் வழங்குமாறு குறிப்பாக வேண்டி முறையிடுகின்றார்.

தாழிசை

2870.

     பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
     உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.

உரை:

     பற்றுக் காரணமாகப் பலவற்றை நினைத்தெழும் பாவியாகிய மனத்தினுடைய தீமைகளை உற்று நினைக்கும்போது வருத்தம் தோன்றி உடம்பெல்லாம் ஊடுருவிப் போகிறது. எ.று.

     அடா - தோழனை யழைக்கும் அன்மை விளி. பற்று - யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்கள். யான் என்னும் பற்று, தற்போதத்தைத் தூண்டி, நான் செய்தேன், செய்வேன் என்னும் மமதை நினைவை மனத்தில் எழுப்புதலால், “பற்று நினைத்தெழும் பாவி மனம்” எனப் பகர்கின்றார். பாவி மனம் - பாவியாகிய மனம். மன நினைவு சொல்லுக்கும் செயலுக்கும் ஏதுவாய் தீங்கு விளைவிப்பது பற்றி, “பாவிமனத் தீமையெலாம்” என வுரைக்கின்றார். மன நினைவுகளால் விளையும் தீங்குகளையே ஊன்றி நினைக்குங்கால் அவற்றால் உளவாகும் துன்பங்கள் நினைவில் காட்சிதந்து அச்சுருத்துவதால் “உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவிப்போகுது” என விளம்புகிறார்.

     (1)