பக்கம் எண் :

2877.

     தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
     ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.

உரை:

     நன்மை தீமைகளைக் கண்டு, செய்வதும் தவிர்வதும் அறிய மாட்டாத சிறியவனாகிய யான் செய்த தீமைகளனைத்தையும் நன்குணர்ந்து நினைக்குங்கால் உள்ளமெல்லாம் ஊடுருவுகின்றது, காண். எ.று.

     செயற் குரியவற்றின் நலம் தீங்குகளை யறிதலும், அறிந்து இது செய்தற்குரியது இது தகாதது என்று துணிதலும் தேர்ந்து தெளிதலாம். போதிய அறிவுடையார்க் கன்றி இப்பண்பு அமைவ தில்லையாதலால், “சிறியவனேன்” என்றும், அதனா லுண்டாகிய குற்றங்களைத் “தீமையெலாம்” என்றும், அவை மனநோயைத் தந்து வருத்துவது விளங்க, “ஊடுருவிப் போகுது” என்றும் உரைக்கின்றார். ஓர்ந்து நினைத்தல் - எய்திய மனநோய்க்குரிய காரியங்களை எண்ணுதல்.

     (8)