29. உளமெனது வசநின்ற தில்லையென் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவு மில்லை
உன்பதத் தன்பில்லை யென்றனக் குற்றதுணை
யுனையன்றி வேறுமில்லை
இளையனவ னுக்கருள வேண்டுமென் றுன்பால்
இசைக்கின்ற பேருமில்லை
ஏழையவனுக் கருள்வ தேனென்று னெதிர்நின்று
இயம்புகின் றோரு மில்லை
வளமருவு முனது திருவருள் குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கு மில்லை
வந்திரப் போர்களுக் கிலையென்ப தில்லைநீ
வன்மனத் தவனு மல்லை
தளர்விலாச் சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: வளக்குறையாற் சோர்வு படாத சென்னைக் கந்த கோட்டத்துட் கோயில் கொண்டு விளங்கும் கந்த சாமிக் கடவுளே, தண்ணிய ஒளி பொருந்திய தூய மணிகளுட் சைவமணியாய்த் திகழும் சண்முகங்களையுடைய தெய்வமணியே, என் உள்ளம் என்வசமாய் நிற்பதில்லை; என்னுடைய முன்னை வினையும் விரைவில் விட்டு நீங்கவில்லை; உன்னுடைய திருவடியில் அன்பு செய்வதுமில்லை; எனக்கு உற்ற துணையும் உன்னையன்றி வேறு எவரும் இல்லை; இளையவனாகிய இவனுக்கு அருள் செய்ய வேண்டும் என்று உன்னிடத்தில் எனக்காக எடுத்துரைப்பவரும் இல்லை; ஏழையாகிய அவனுக்கு அருள் புரிவது எற்றுக்கு என உன் திருமுன் நின்று என்னை எதிர்த்து மொழிபவரும் இல்லை; வளம் பொருந்திய உன்னிடத் துளதாகிய அருட்செல்வம் குறைந்து போவதுமில்லை; மேலும் உனது அருளியல்பற்றி வழக்கிடுவோரும் இல்லை; உன்பால் வந்து இரப்பவர்களுக்கு இல்லையென்று சொல்லுவதும் உன்பால் கிடையாது; இல்லையென மறுக்கும் வன்மனமுடையவனும் நீ அல்லை; நிலைமையிதுவாக யான் அருள்பெறாது வருந்துதற்குக் காரணம் அறிகிலேன்! எ. று.
வளமைக் குறைவால் மக்கள் மனத்தளர்ச்சி யுற்று வருந்தும் நிலை சென்னைநகர்க்கு உண்டாவதில்லை என்பது புலப்படத் “தளர்விலாச் சென்னை” என்று புகழ்கின்றார். “ஒன்றி யிருந்து நினைமின்” எனவும், “இரண்டுற மனம் வையேல்” (சீபருப்ப) எனவும் சமய குரவர்கள் வற்புறுத்தலால், அதன்படி நில்லாமல் அலைவதுபற்றி “உளம் எனது வசம் நின்றதில்லை” என்று கூறுகிறார். பழவினை போந்து தாக்கும் காலமும் இடமும் அறியப் படாமையாலும், நுகர்ந்தன்றிக் கழிக்கப் படாமையாலும் “என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவுமில்லை” என்று இயம்புகிறார். “கழலா வினைகள் கழற்றுவ” (ஐயாறு) எனப்படும் நின் திருவடிக்கண் அன்பும் என் உள்ளத்து உளதாகிற தில்லை யென்பார், “உன்பதத்தன்பில்லை” எனவும், திருவடியினும் வேறு துணையாவாரும் ஆவதும் வேறில்லை என்பார், “எனக்கு உற்ற துணை உனையன்றி வேறும் இல்லை” என்று இசைக்கின்றார். முருகப் பெருமானை நினைந்து வழிபட்டால், கூளியர் பலர் அவன் திருமுன் சென்று வழிபடுவோர் நிலைமையை எடுத்துரைப்பது மரபாதலின், “இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்பால் இசைக்கின்ற பேரும் இல்லை” என மொழிகின்றார். “நின்னடியுள்ளி வந்தனன் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் குறித்தது மொழியா அளவையின் குறித்துடன், வேறுபல் லுருவின் குறும்பல் கூளியர், சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி, அளியன் தானே முதுவாய் இரவலன், வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து” (முருகு. 279-85) என்று மொழிவர் என நக்கீரர் கூறுவதறிக. அருளாளர் முன்பு நல்லது நயந்து எடுத்துரைக்குமிடத்து அருள் வேண்டுவோர்பாற் காணப்படும் இரக்கத்தால் அருட்கொடையை வலியுறுத்துவது அன்றி நீ அருள் செய்தலைத் தடுத்துரைப்போர் யாருமில்லை என்பார் “ஏழை யவனுக்கு அருள்வது ஏன்? என்று உன் எதிர் நின்று இயம்புகின்றோரும் இல்லை” என்று மொழிகின்றார். பொருட்செல்வம் போல் அருட் செல்வம் கொடுக்கக் குறைபடாத இயல்பிற்றாதலால், “வளமருவும் உனது திருவருள் குறைவதில்லை” என்றும், செல்வம் எனப் படுதலால், பொருட்குப் போல அருட்கும் பெருக்கமும் சுருக்கமும் உண்டென வழக்கிடுபவர் கிடையாது என்பார், “மேல் மற்றொரு வழக்கும் இல்லை” என்றும் இயம்புகின்றார். பொருளாளர் சிலர்பாற் காணப்படும் “இலன் என்னும் எவ்வம்” அருட்செல்வனாகிய நின்பால் இல்லை என்றற்கு “வந்திரப் போர்களுக்கில்லை என்பதில்லை” எனவும், அதற்கேதுவாகிய வன்மனமும் உனக்கு இல்லை என்பார், “நீ வன்மனத் தவனுமல்லை” எனவும் கூறுகின்றார். நிலைமை யிதுவாக என்பது முதலாயின குறிப்பெச்சம்.
இதனால், அருள் வேண்டி நிற்கும் தமது சிறுமையும் அருள் வழங்கும் முருகனது பெருமையும் எடுத்தோதியவாறாம். (29)
|