22. பணித்திறஞ்சாலாப் பாடிழிவு
அஃதாவது முருகப் பெருமானுக்கும் அவனுடைய அடியார்க்கும் செய்தற்குரிய நற்பணிகளை நன்கு செய்தற்கு வேண்டிய செய்திறம் இல்லாமை கூறி அதனால் உளதாம் இழிதகவு நினைந்து வருந்துவது. பணித்திறம் - பணிவகைகள். சாலாப்பாடு - குணஞ் செயல்கள் இல்லாமை. சாலாமை - அமையாமை. இதன்கண் நற்பணி வகைகளைச் செய்யா தொழிந்த இழிதகவைப் பாட்டுத் தோறும் எடுத்துரைக்கின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 291. அடுத்திலேன் நின்னடியர் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
தொடுத்திலேன் அழுதுநின தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூநீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லனெனும் பெயரை அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
உரை: ஐயனே, நின்னுடைய அடியவர் கூட்டத்தைச் சேர்ந்தறியேன்; நின்பால் சிறிதளவும் அன்புற்றறியேன்; நினக்குத் தொண்டனாதலும் இல்லேன்; மனத்தின்கண் எழும் வஞ்ச நினைவுகளை எழாதபடித் தடுத்ததுமில்லை; தணிகைப் பதியை யடைந்து நின்னைக் கண்களாற் கண்டு இனிய சுவையை யுடைய தமிழ்ப் பாமாலை பாடி நினக்கு அணிந்ததில்லை; நினது திருவருள் வேண்டித் தொழுவதும் அழுவதும் செய்து அப்பொழுது உண்டாகும் பத்தி யின்பமாகிய தூய நீரிற் படிந்ததில்லை; நல்லவன் என்ற பெயரையும் பெற்றிலேன்; ஐயோ, யான் ஏன் பிறந்தேனோ? நிலத்துக்கு வெறுஞ்சுமையாய் இருக்கின்றேனே, இது தகுமோ? எ. று.
பேரின்ப அன்புருவாகிய பெருமானாகிய உன்பால் இயல்பாக உண்டாக வேண்டிய நல்லன்பு கொள்ளாதவன் என்று தன்னை உரைக்கின்ற அருள் வள்ளலார், “சற்றும் அன்பிலேன்” எனவும், அன்பு பெறுதற்கு அடியார் உறவு இன்றியமையாதாக அதனைத் தானும் அவர் கூட்டத்தைச் சேர்ந்து பெறுகின்றேனில்லை என்பார், “அடுத்திலேன் நின்னடியர் அவைக்குள்” எனவும் கூறுகின்றார். அன்பினால் தொண்டனானாலன்றி அவரது கூட்டத்தைச் சேர்தல் கூடாதாகலின், “நின் தொழும்பனாகேன்” என வுரைக்கின்றார். தொழும்பன் - தொண்டு செய்பவன். அன்பு நிலவ வேண்டிய என் மனத்தின்கண் பிறரை வஞ்சிக்கும் எண்ணங்கள் தோன்றி நிறைந்து விடுமாதலால், அவற்றைத் தடுத்துக் கொள்ளும் நல்லறிவும் என்னிடமில்லை என்பாராய், “வஞ்சம் தடுத்திலேன்” என மொழிகின்றார்; அறிவு தோன்றி நிறைவும் வன்மையும் பெறுதற்கு அவ்விரண்டின் திருவுருவாகிய நீ எழுந்தருளும் தணிகைப் பதியை யடைந்து நின்னைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதும், மகிழ்ச்சியால் இனிய தமிழாற் பாமாலை பாடிப் பரவ வேண்டும் என்றற்குத் “தணிகைதனிற் சென்று நின்னைத் தரிசனம் செய்தே மதுரத் தமிழ்ச் சொல்மாலை தொடுத்திலேன்” என வுரைக்கின்றார். உள்ளத்தில் உவகை யுறும் போது இனிய பாட்டுக்கள் உருவாகுமென அறிஞர் கூறுவர். நிரல்படவமைந்த பாக்களைப் பாமாலை யென்றலின், அதற்கேற்பச் “சொன்மாலை தொடுத்திலேன்” எனச் சொல்லுகின்றார். இன்ப அன்பால் உள்ளத்தில் பாட்டுக்கள் உருவாகும் போது அழுகையும் கண்ணீரும் அருள் பெறற்கு வேண்டும் உருக்கமும் உண்டாவது இயற்கையாதலால், “அழுது நினது அருளை வேண்டித் தொழுது தொழுது ஆனந்தத் தூ நீர் ஆடேன்” என இயம்புகிறார். மகிழ்ச்சி பெருகுமிடத்துக் கண்களில் நீர் நிறைந்தொழுகுவது கண்ட பெரியோர், அதனை இன்பத்தின் உருவாகக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் எனவும், உவகை கலுழ்ச்சி யெனவும் குறிப்பது பற்றி, “ஆனந்தத் தூ நீர் ஆடேன்” எனக் கூறுகின்றார். ஆடுதல் ஈண்டு மேனி நனையச் சொரிதல். நற்பண்புடையாரை அவர்களின் சொற் செயல்களால் அறிகின்ற உலகவர், “நல்லவர்” என்று பாராட்டுவர். அப்பாராட்டைப் பெறுவது நல்வாழ்க்கையின் பயன்களில் ஒன்று. அதனையும் தாம் பெறாமைக்கு வருந்துகின்றமை புலப்பட, “எடுத்திலேன் நல்லனெனும் பெயரை” எனவும், “அந்தோ” எனவும் உரைக்கின்றார். நிலத்திற் பிறந்தும் நற்பயன் பெறும் செயலின்றிக் கெடுதலால் “ஏன் பிறந்தேன்” என்றும், எனது இருப்பு நிலத்துக்கு வீண் சுமையாகும் என்பார், “புவிச் சுமையாய் இருக்கின்றேனே” என்றும் கூறுகின்றார்.
இதனால், திருவருட் பேற்றுக்குரிய செயல் திறம் இன்றி நிலத்துக்குச் சுமையாயிருப்பதாக நொந்து கூறியவாறாம். (1)
|