பக்கம் எண் :

2940.

     வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
     என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.

உரை:

     அழகிய அமுதாகிய பெருமானே, உயிர்கட் கெல்லாம் இன்பம் பெருகுமாறு அம்பலத்தில் இடையற வின்றி ஆடல் புரிகின்றாயாதலால், எனக்கு அமுது போன்றவனே, உன்னுடைய இரண்டாகிய திருவடிகள் நோதல் இல்லையோ. எ.று.

     வண்ண அமுது - வன்னமுது என வந்தது. வண்ணம் - அழகு. மலிதல் - மிகுதல். உலகுயிர்கட்கு ஞானப் பேரின்பம் உண்டாதற் பொருட்டு ஆடுதல் பற்றி, “இன்பம் மலியமன்றில் ஆடுகின்றாய்” என வுரைக்கின்றார். “நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தான் எந்தையார் பரதம் தான்” (உண்மை விளக்.) எனப் பெரியோர் உரைப்பது அறிக. “வன்னமுதே” எனப் பொதுப்படக் கூறியவர், தனக்குள்ள உரிமை புலப்பட, “என்னமுதே” என வுரைக்கின்றார்.

     (2)