பக்கம் எண் :

2945.

     சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
     தெய்வ மணியே திருவடிதான் நோவாதா.

உரை:

     சைவ நெறி நிலைகொண்டு மேலும் தழைத்து வளரத் திருக்கூத்து ஆடுகின்றாயாயினும், தெய்வங்கட் கெல்லாம் முடிமணியாய்த் திகழும் திருவடிகள் நோதல் இல்லையோ. எ.று.

     சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்ட சமய நெறி சைவம். “சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல், சைவம்தனை யறிந்தே சிவம் சாருதல்” (திருமந். 1512) என்பர் திருமூலர். நிலைபேறு கொண்டாலன்றித் தழைத்தலும் ஓங்குதலும் இன்மையின், “சைவம் நிலைத்துத் தழைத்தோங்க ஆடுகின்றாய்” எனக் கூறுகின்றார். தேவ தேவனாய்த் தேவர் முடி சாய்த்து வணங்கப்படுதலின், “தெய்வ மணி” எனச் சிறப்பிக்கின்றார். மணி போல்வதால் மணி என்கின்றார். “தொழப்படுந் தேவர் தொழப்படுவான்” (தனி) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     (7)