2949. வில்வவேர் மாலை மிளர்ந்தசைய வாடுகின்றாய்
செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.
உரை: வில்வத்தால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை பச்சொளி விளங்கி அசைந்தாட திருக்கூத்தாடுகின்ற அருட் செல்வமே, உனது திருமேனி நோவதில்லையோ. எ.று.
இவ்விரண்டு கண்ணிகளிலும் கூத்தின்கண் ஆடற்கேற்ப உருவத் திருமேனி வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சதி பிழையாமல் இயங்குவதால் வருந்துமே என மனம் கசிந்துருகுகின்றமை தோன்றத் “திருமேனி நோவாதோ” எனக் கூறுகின்றார். (11)
|