2951. ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே.
உரை: ஐயனே, ஆசைகளை நீக்கி நமக்கு இன்பத்தை யளிக்குமென்று கருதி அம்பலத்தில் ஆடுகின்ற நின் திருவடிக் கண்ணே ஆசை கொள்வேனாயினேன். எ.று.
ஈடனை - மனைவி மக்கள் பொருள் என்ற மூன்றின்மேல் உண்டாகும் ஆசை. இவற்றை ஈஷணாத் திரையம் என்பர். கைவல்ய நவநீத முடையாரும், “மனைவி மக்கள் அர்த்த வீடணைகள் மூன்று” (தத்துவ. 13) என்பர். இம்மூன்றும் துன்பத்துக் கேதுவாகலின், “ஈடணைகள் நீக்கி” என்று கூறுகிறார். “ஆசையும் அன்பும் அறுத்த பின், ஈசன் இருந்த இடம் எளிதாமே” (திருமந். 2613) எனப் பெரியோர் கூறுவர். “ஆசை வைத்தேன்” என்பதில் ஆசை யென்பது மெய்யன்பு என அறிக. ஆசை துன்பத்துக் கேது; அன்பு இன்பத்துக் கேது எனப் பகுத்துணர்க. (2)
|