பக்கம் எண் :

2955.

     ஈனமறுத் தென்டும் இறவாமை நல்குமென்றே
     ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.

உரை:

     இறப்பதற் கேதுவாகிய குற்றங்களைப் போக்கி என்றும் சாவாமையாகிய நித்திய நிலையை நல்குமெனக் கருதியே ஞானவொளி பரப்பும் மணி யிழைத்த அம்பலத்தின்கண் நேசமுற்றேன். எ.று.

     உண்டியும் உழைப்பும் மிகுதி குறைவுகளால் இறப்பை யுண்டு பண்ணுதலால், அவற்றை “ஈனம்” எனக் கூறுகின்றார். ஈனம் அற்ற விடத்து இறவாமை எளிதில் எய்தும் என்பாராய், “ஈனம் அறுத்தென்றும் இறவாமை நல்கும்” என இயம்புகின்றார்; “அற்றால் அளவறிந் துண்க அஃது உடம்பு பெற்றான் நெடிதுய்க்குமாறு” (குறள்) எனச் சான்றோர் அறிவுறுத்துவது காண்க. ஞான மன்று என்று இயைந்து ஞான சபை என்றும் பொருள்படும். நண்பு - நட்பு; நேசம் என்று வழங்கும் அன்புக்காயிற்று.

     (6)