2956. ஓர் துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி
ஆர் துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே.
உரை: என் அன்புடைய ஐயனே, எனக்கு ஒப்பற்ற துணையாவது நினது திருவடி யென எண்ணி யுள்ளேனாதலால், உன்னை யொழிய வேறே யாவர் துணையும் விரும்ப மாட்டேன். எ.று.
எனது சிறந்த பொருளாகிய அன்பைத் தனக்கே யுடைய தலைவனே என்றற்கு, “என் அன்புடைய ஐயா” என உரைக்கின்றார். உயிர்க்குயிராயும் உடனிருந்தும் உதவுகிற துணை இறைவனை யன்றி வேறொன்றும் இல்லாமை யறிந்துரைத்தலால், “ஓர் துணை நின் பொன்னடி யென்று உன்னுகின்றேன்” என இயம்புகின்றார். உன்னுதல்-ஆழ நினைத்தல். வேறு துணையாவார் யாவரும் உயிரின் வேறாய் நின்று துணை செய்து உயிர் நீங்குங் காலத்துக் கையொழிதலால், “உன்னையன்றி ஆர் துணையும் வேண்டேன்” என்று விளம்புகின்றார். (7)
|