2963. நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
உரை: எனக்கு அன்புடைய ஐயனே, கேடு விளைவியாத நினது திருவருளாகிய சிவஞான மருந்துண்டு மகிழ்தற்கு என்னுடைய உள்ளத்தில் ஆசை மேன் மேல் மிகுகின்றது, காண். எ.று.
மருந்து - தேவர்கள் உண்ட சாவா மருந்து. சாவா மருந்துண்டும் தேவர்கள் செத்து மடிதலால், திருவருளாகிய மருந்தை, “நாசமிலா நின்னருளாம் ஞான மருந்து” என்று நவில்கின்றார். ஞான வுருவினதாகலின், “ஞான மருந்து” என்றும், அது தானும் உண்ணப்படுவது பற்றி, “உண்ண” என்றும் உரைக்கின்றார். (14)
|