31. நடேசர் கொம்மி
அஃதாவது பெதும்மைப் பருவ முதலாக வுள்ள இளம் பெண்கள் கைகளை, அடுக்களைக் கொம்மை போலக் குவித்துச் சிலரும் பலருமாய்க் கூடி வட்டமாய் நின்று கைகளைத் தட்டியும் குவித்தும் வாயாற் பாடிக் கொண்டு சுழன்று ஆடுதல். கொம்மைபோல் கைகளைக் குவித்தாடுவது கொம்மியாயிற்று. கொம்மை யுடையது கொம்மி. நாட்டுப் புறங்களில் விழாக் காலங்களில் நிலவு விளங்கும் முன்னிரவில் மகளிரது இக் கும்மியை இந் நாளிலும் காணலாம். இது மூச்சீரடிகளாலாகிய பாட்டுக்களை யுடைமையால் சிந்து எனப்படுகிறது. பல்லவி - முன்னுற எடுத்துப் பாடும் பாடற் பகுதி. மலர்ச் செடிகளின் தலையில் தோன்றும் தளிர் போல மகளிரின் தலைமேல் கை மலர நின்று பாட்டை எடுத்தலால், முதலெடுப்புப் பல்லவி எனப்படுகிறது. பல்லவம் - தளிர். பல்லவம் போல்வது பல்லவி. தலைத் தளிரின் கீழ் இருக்கும் தளிர் அனுபல்லவியாகும். அதற்குக் கீழிருக்கும் கண்ணிகளைக் கருநாடகச் சங்கீதம், சரணம் (அடி) என வழங்கும். கருநாடகத்தவர், பாட்டுக்களை இவ்வாறு பல்லவி, அனுபல்லவி, சரணம் என வகுத்துப் பாடினராதலால், இந்நாளில் அப்பிரிவே வழக்கில் வந்துள்ளது. இக் கொம்மியும் அவ்வியல்பே கொண்டு கூத்தப் பிரானுடைய குணஞ் செயல் நலங்களைக் கூறுகின்றது.
சிந்து
பல்லவி 2964. கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
உரை: பெண்களே, கொம்மி யடித் தாடலாம் வாருங்கள்; ஆடுமிடத்து மார்பு குலுங்கக் குதித்தாடி மகிழலாம். எ.று.
மகளிரைத் தனித் தனியாகக் குறிப்பது தோன்ற, “கொம்மியடி” என்று பாடுகிறார் பெதும்மைப் பருவத்தரும் அதற்கு மேலுள்ள மடத்தை மங்கையாகிய பருவத்தரும் கூடியிருப்பது விளங்க, “இரு கொங்கை குலுங்கக் கொம்மியடி” என்று கூறுகின்றார்கள். (1)
|