2967. ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
ஆட்கொண் டருளிய தேஜ னடி
வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
வாளன டிமண வாள வடி. கொம்மி
உரை: ஆனந்த தாண்டவன் - உயிர்கட்கு இன்பம் விளைவிக்கும் கூத்தன். தாண்டவம் - கூத்து. தேசன் - ஒளி யுடையவன். வான் அந்த மாமலை - வானத்தை யளாவிள பெரிய இமயமலை. மலை மங்கை - உமாதேவி. வடிவாளன் - அழகு மிக்க வுருவினன்; கூரிய வாளேந்துபவன் எனினும் பொருந்தும். மணவாளன் - மணம் செய்து கொண்ட கணவன். (2)
|