32. தோழியர் உரையாடல்
அஃதாவது, இளமகளிர் வரிசைக்கு அறுவரும் எழுவருமாக எதிர் முகமாக நின்று, ஒரு வரிசையினர் வினாவலும், எதிர் வரிசையினர் விடை கூறலுமாகப் பாடுவது, மகளிர் விளையாட்டினுள் ஒன்று. மணந்த கணவனுடைய இயலும் இடமும் கூறுவது குறிப்பு.
தாழிசை 2971. தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
தான்கொண்ட நாயக ராரே டி
அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
ஐய ரமுத ரழக ரடி.
உரை: தண்மதி ஒண்முகப் பெண்மணி - தண்ணிய முழுச் சந்திரன் போன்ற ஒள்ளிய முகத்தை யுடைய பெண்களில் மணியாகியவள். கொண்ட நாயகர் - மணந்து கொண்ட கணவர். அண்மை - பக்கம். பொன்னணியம் பலம், பொன் வேய்ந்த சிற்றம்பலம். அமுதர் - அமுதம் போல்பவர். தோழியை ஏடி என்றலும் தோழனை ஏட என்றலும் விளி மரபு. ஆரேடி என்பது வினாவும் வரிசையினர் கூற்று. அழகரடி என்பது விடை வழங்குவோர் கூற்று. இனி வரும் பாட்டுக்களிலும் இதுவே கூறிக் கொள்க. (1)
|