பக்கம் எண் :

299.

    அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
        அகமலர முகமலர்வோ டருள்செய் யுன்றன்
    செம்பாத மலரேத்தேன் இலவு காத்தேன்
        திருத்தணிகை யேநமது செல்வ மென்றே
    நம்பாத கொடியேனல் லோரைக் கண்டால்
        நாணிலே னொடுங்கிலே னாயிற் பொல்லேன்
    எம்பாத கத்தையெடுத் தியார்க்குச் சொல்வேன்
        ஏன்பிறந்தேன் புவிச்சுமையா யிருக்கின் றேனே.

உரை:

     அம்பு போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் மேல் விருப்புற்றுத் திரிவேனாகிய யான் மனம் மகிழுமாறு முகமலர்ச்சியுடன் எனக்கு அருள் புரிக என்று திருவடிகளாகிய செந்தாமரை மலர்களை யேத்தித் தொழுவதில்லாதவ னாயினும் இலவு காத்த கிளி போல அருள் நோக்கி ஏமாற்ற மெய்தினேன்; திருத்தணிகைப் பதியே நமக்குச் செல்வமாம் என்பதை நம்புதல் இல்லாத கொடியவனான நான், அருள் பெற்ற நல்லோரைக் கண்டு நாணுவதோ மனம் பதறுவதோ இன்றி நாயினும் பொல்லாதவனானேன்; என் போன்றவர்களின் பாதகச் செயல்களை யார்க்கு எடுத்துரைப்பேன்; நான் வீணாகப் பிறந்தது ஏனோ? பூமிக்குச் சுமையாக இருக்கிறேன், எ. று.

     அம்பாதல் - அம்பு போலுதல். நீண்ட கண்ணுடைமை மகளிர்க்கு அழகு தருவது பற்றி நெடுங்கண்ணார் எனச் சிறப்பிக்கின்றார். அகம் - மனம். அகத்தையும் முகத்தையும் தாமரையாகக் கூறுவது பற்றி, உவகையுறும் மனத்தையும் முகத்தையும் முறையே, “அகமலர முகமலர்வோடு” என வுரைக்கின்றார். மகளிர் மேற்சென்ற ஆசையால் வருந்திய என் மனம் மலர, அன்பால் முகமலர்ச்சியுடன் அருள் புரிக என வேண்டுகின்றாராதலால், “முகமலர்வோடு அருள்செய்” என்கின்றார். என்றென்னும் இடைச்சொல் வருவிக்கப்பட்டது. செம்பாத மலரென்பதைப் பாதச் செம்மலர் என இயைக்க; பாதமாகிய செந்தாமரை மலர் எனப் பொருளுரைக்க. ஏத்தினும் ஏத்தா தொழியினும் முருகப் பெருமான் அருள் புரிவான் என்று நல்லோர் உரைப்பதை யெண்ணி அருள் நோக்கி யிருந்ததைக் கூறுவார், “இலவு காத்தேன்” என வுரைக்கின்றார். இலவு - இலவமரம். இலவு பூத்தது கண்டு கிளிகள் காத்திருக்கு மெனவும், காய்த்த இலவு பழுத்து வெடித்துப் பஞ்சு பறப்பது நோக்கி ஏமாறுவது போலத் திருவருளை எதிர்நோக்கிப் பின்பு எய்தாமை யுணர்ந்து வருந்துவே னாயினேன் என்றற்கு, “இலவு காத்தேன்” எனக் கூறுகிறார். திருவருள் எய்தாமைக்குக் காரணம் யாதெனச் சிந்திப்பவர், திருத்தணிகையே திருவருட் செல்வம் இருக்குமிடம் எனச் சான்றோர் எடுத்துரைக்கவும், அதனை நம்பா தொழிந்தமை புலப்படத் “திருத்தணிகையே நமது செல்வமென்றே நம்பாத கொடியேன்” என்றும், அதனால் அப்பெருமக்களைக் காணின் நாணமும் நடுக்கமும் உண்டாதல் இயல்பாதல் பற்றி, “நல்லோரைக் கண்டால் நாணிலேன் நடுங்கிலேன்” என்றும், “நாயிற் பொல்லேன்” என்றும் நவில்கின்றார். நம்புதற்குரிய உள்ளம் நம்பாமை கொடுமையாதலால், “நம்பாத கொடியேன்” என்கின்றார். கொடுமை - வளைவு. பாதகம் - மிகவும் தீய செயல். ஒருவன் தான் செய்த தீவினையைச் சொன்னால் செவி சாய்த்துக் கேட்பார் யாருமில்லை யாதலால், “பாதகத்தை யார்க்குச் சொல்வேன்” என மொழிகின்றார்.

     இதனால், திருத்தணிகையே நமது செல்வம் என்று நல்லோர் சொல்வதை நம்பாது கெட்டமை சொல்லி வருந்தியவாறு பெற்றாம்.

     (9)