பக்கம் எண் :

36. நன்றாய் கவன்றது

    அஃதாவது, தான் பெற்ற மகளின் நினைவும் சொல்லும் செயலும் வேறுபட்டமை கண்டு கவலையுற்ற தாய் செவிலியிடம் சொல்லுவது.

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2996.

     திருஅருட் புனிதை மகிழநின் றாடும்
          தில்லைமன் றழகனே என்பாள்
     மருவருட் கடலே மாணிக்க மலையே
          மதிச்சடை வள்ளலே என்பாள்
     இருவருக் கரிய ஒருவனே எனக்கிங்
          கியார்துணை நின்னலா தென்பாள்
     வெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள்
          வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே

உரை:

     திருவருளுருவின் புனித மங்கையாகிய உமாதேவி கண்டு மகிழ நின்று திருக்கூத்தாடும் தில்லையம்பலத்து அழகனே என்றும், தெய்வ மணம் பொருந்திய அருட் கடலே என்றும், மாணிக்க மலையே என்றும், பிறைமதி தங்கும் சடையையுடைய வள்ளலே என்றும், பிரமனும் திருமாலுமாகிய இருவர்க்கும் காண்பரிய ஒருவனே உன்னையன்றி எனக்குத் துணையாவார் யாருமில்லை என்றும், என் மின் போலும் இடையை மகள் வாய்வெருவி மனம் கரைந்து கண்ணீர் சொரிந்து பெருமூச் செறிகின்றாள்; நான் என் செய்வேன். எ.று.

     திருவருளே திருமேனியாக வுடையவளாதலால், உமாதேவியைத் “திருவருட் புனிதை” எனம் புகழ்கின்றாள். புனிதம் - தூய்மை; தூயனைப் புனிதன் என்பதுபோலத் தூயவளைப் புனிதை எனப் பெயர் குறிக்கின்றார். சிவபெருமானைக் கூத்தாடக் கண்டு இன்புறுகின்றாள் எனச் சான்றோர் உரைப்பதால், “புனிதை மகிழ நின்றாடும் அழகன்” என்று புகல்கின்றாள். “கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா” (வட திருமுல்லை) என்று நம்பியாரூரர் பாடுவர். கூத்தாடுமிடம் தில்லையம்பலம் என்றற்குத் “தில்லை மன்று அழகனே” என நங்கை கூறுகிறாள். திருக்கூத்து உலகுயிர்கட்கு நல முண்டாதல் குறித்த தென்பாராய்க் கொற்றவன் குடி உமாபதி சிவனார், “ஞாலத்து அரந்தை கெட மணி மன்றுள் ஆடல் காணும் அன்னை” (சிவப்) என்பது காண்க. சிவனுக்குச் சொக்கன் என்ற பெயர் வழங்குதலால், “அழகன்” என்று குறிக்கின்றாள். குறையா நிறைவுடைமை பற்றி “அருட் கடலே” எனவும், செம்மை நிறத்தாலும் சிவஞான ஒளியாலும் சிவபெருமானை, “மாணிக்க மலையே” எனவும் போற்றுகின்றாள். “மருவார் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல வருவார் விடையேறி” (கடவூர்) என நம்பியாரூரர் போற்றுவது காண்க. மதி - பிறைமதி. வரையாத வண்மை விளங்க “வள்ளல்” என்கிறாள். இருவர், திருமாலும் பிரமனுமாகிய இருவர் ஒருவன் - சிவனுக்குரிய பெயர்களில் ஒன்று. “ஒருவனென்னும் ஒருவன் காண்க” (அண்டப்) எனத் திருவாதவூரர் கூறுவர். உயிரோடு ஒன்றாயும் உடனாயும் நின்று துணை புரிதலின், “எனக்கு இங்கு யார் துணை நின்னலாது” என வுரைக்கின்றாள். வெருவுதல் - உறக்கத்திற் பேசுதல். “வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்” (பெரிய - 5:5) எனத் திருமங்கை மன்னர் உரைப்பது காண்க. நீர் துளித்தல் - நீரைத்துளித் துளியாகச் சொரிதல். வெய்துயிர்த்தல் - பெருமூச் செறிதல்; இம் மூச்சு வெம்மையாக இருத்தலால், வெய்துயிர்த்தலாகிறது. மின்னற்கொடி போன்ற இடையையுடையவளை “மின்” என மொழிகின்றாள்.

     இதனால், மகள் படும் வருத்தங் கண்டு நற்றாய் ஆற்றாமல் செவிலிக்கு உரைத்து அயா வுயிர்த்தவாறாம். இதனைப் பிறாண்டும் கூறிக் கொள்க.

     (1)