பக்கம் எண் :

2997.

     ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என்
          றுருகுவாள் உணர்விலள் ஆகித்
     தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ
          தெய்வமே தெய்வமே என்பாள்
     பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான்பெண்
          பாவிகாண் பாவிகாண் என்பாள்
     வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து
          வல்வினை யேன்பெற்ற மகளே.

உரை:

     கொடிய வினையை யுடையவளாகிற நான் பெற்ற மகள், தெரு வழியே ஓடித் தில்லைச் சிற்றம்பலம் என்று சொல்லி, மனம் உருகுகிறாள்; தனது உணர்வையிழந்து அம்பலவாணனைத் தேடித் திகைப்புற்று மயங்கி நிற்பாள்; ஐயோ தெய்வமே தெய்வமே என்று வாய்வெருவுவாள்; அப்பெருமான் புகழைப் பாடுவாள்; உடல் பதைக்கத் துடித்துப் பெண்களில் நானொரு பாவி காண் என்று பன்முறையும் சொல்லுகிறாள்; பின்பு அறிவு மயங்கி மெய்வாடி ஒருபால் இருந்து வருந்துகின்றாள்; இதற்கு யான் என்ன செய்வேன். எ.று.

     மகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய நற்றாய், தன்னை நொந்து கொள்வாளாய், “வல்வினையேன் பெற்ற மகள்” என்று சொல்லுகின்றாள். தான் செய்த வினை காரணமாகத் தன் மகட்கு இம் மனநிலை யுண்டாயிற்றென்பது அவள் கருத்து. மனையின்கட் செறித்து வைப்பினும் இராது பெண்மைக்குரிய நாணத்தைக் கைவிட்டுத் தெருவில் ஓடுகிறாள். என்பாள், “ஓடுவாள்” என்றும், பிடுத்துக் கொணர்ந்து மனைக்குட் புகுந்தால், தில்லையம்பலத்தை நினைந்து உருகுகின்றாள் என்பாளாய், “தில்லைத் திருச்சிற்றம்பலம் என்று உருகுவாள்” என்றும் உரைக்கின்றாள். தன் நல்லுணர்வை யிழந்து அம்பலத் தண்ணல் தன்பால் வந்து சென்றதாக எண்ணித் தேடிக் காணாமல் திகைத்து நின்றாங்கு மருண்டு நிற்கிறாள் என்பாளாய், “உணர்விலளாகித் தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள்” என்று கூறுகின்றாள். பெரிதும் நோயுற்றவள் போலும் புலம்புகிறாள் என்பாளாய், “ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்” என்றும், சிறிது போதில் புலம்புவதை விடுத்து, உவகையுடன் அம்பலவாணன் புகழைப் பாடுகிறாள் என்றற்குப் “பாடுவாள்” என்றும் நற்றாய் சொல்லுகிறாள். பின்பு உவகையின் நீங்கி, இழவாதன இழந்தவள் போல உடல்பதைக்கப் பதறி “நான் பெண் பாவி காண் பாவி காண், என்பாள்” எனவும், ஊணும் உறக்கமும் இன்மையின் உடம்பு நனி சுருங்கி வாடி வருந்துகிறாள் என்பாளாய், “வாடுவாள் மயங்கி இருந்து வருந்துவாள்” எனவும் எடுத்துரைக்கின்றாள்.

     (2)