3. துடியென்னும் இடையனம் பிடியென்னு நடைமுகில்
துணையெனும் பிணைய லளகஞ்
சூதென்னு முலைசெழுந் தாதென்னு மலைபுனற்
சுழியென்ன மொழிசெ யுந்தி
வடியென்னும் விழிநிறையு மதியென்னும் வதனமென
மங்கையர்தம் அங்க முற்றே
மனமென்னும் ஒருபாவி மயலென்னும் அதுமேவி
மாழ்கநான் வாழ்க விந்தப்
படியென்னு மாசையைக் கடியென்ன வென்சொலிப்
படியென்ன வறியாது நின்
படியென்ன வென்மொழிப் படியின்ன வித்தைநீ
படியென்னு மென் செய்குவேன்
தடிதுன்னு மதில்சென்னை கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: மேகம் படியும் மதில் பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே, தூய மணிகளுட் சைவமணியாம் சண்முகத் தெய்வ மணியே, இடை துடியை நிகர்க்கும் எனவும், நடை அன்னத்தையும் பிடியானையையும் நிகர்க்கும் எனவும், மாலை சூடிய கூந்தல் கருமுகிலை நிகர்க்கும் எனவும், முலை சூதாடும் வல்லெனும் காயை நிகர்க்கும் எனவும், செழித்த தாது எனப்படும் அலையை யுடைய நீரின்கண் தோன்றும் சுழியைப் போல்வது உந்தி யெனவும், மாவடு நிகர்க்கும் கண்ணெனவும், முழுத் திங்கள் போலும் முகம் எனவும் புகழப்படும் மகளிரின் மேனியைப் பற்றி மனமாகிய ஒருபாவி, காம மயல் என்னும் அதனை எய்தி மயங்குதலால், நான் வாழ்வு பெற இவ்வுலகியல் ஆசையை நீக்குக என்று சொல்லும் என்னுடைய சொல் இத்தகையது என்று சொல்லவும், அதனை அறிந்து கொள்ளாமல் நின் சொற்படி என்ன? யான் சொல்லும் மொழியின்படி இவ்வித்தையை நீ படித்து நடப்பாயாக என்று சொல்லுவதால் இதற்கு என்ன செய்வேன். எ.று.
தடி, மேகத்திடைத் தோன்றும் மின்னல்; ஆகு பெயராய் மேகத்துக் காயிற்று. சைவமணி யென்பது செம்மணியாகிய மாணிக்கமணிக் காதலால், முருகனுக்குச் சிறப்புற ஏற்றுதற்கு முகமுடைய சைவமணி என்று சிறப்பிக்கின்றார். துடி, உடுக்கை. இதன் நடுவிடத்தை மகளிர் இடைக்கு உவமம் செய்வது பற்றி, “துடி யென்னும் இடை” என்று குறிக்கின்றார்; “துடி நடுவன்ன துளங்கிய நுசுப்பின்” (பெருங். 2 : 15 : 66) என்று நூலோர் கூறுவது காண்க. அனம், அன்னப்பறவை. பிடி, பெண் யானை. துணை, ஒப்பு. பிணையல், பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை. அளகம், கூந்தல். சூது, சூதாடுகருவி; செப்புக் கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தாற் போல்வது; இதனை வல்லென்றும் கூறுவர். “இணையாகச் செப்பும் சூதும் பெறா முலை பங்கர் தென் தோணி புரேசர்” (கழுமல. மும். 12) எனப் பட்டினத்தடிகள் பாடுவது காண்க. தாது, என்பது நிலம் நீர் முதலிய பூதமைந்திற்கும் பெயராதலின், நீராகிய தாதுவை, “செழுந்தாது என்னும் அலைபுனல்” என்றும், அதன்கண் தோன்றும் நீர்ச்சுழியை மகளிர் உந்திக்கு உவமம் செய்தல் மரபாதல் பற்றி, “அலைபுனற் சுழி யென்ன மொழி யுந்தி” என்றும் கூறுகின்றார். “புனற்சுழி யலைத்துப் பொருந்திய கொப்பூழ்” (பெருங். 2 : 15 : 68) என்று கொங்குவேளிர் உரைப்பது காண்க. வடி, மாவடு; “வடித் தலைக்கண் மலர்” (சீவக. 194) என்பதற்கு “ஒப்பினால் வடுவகிரிடத்தே நிற்கும் கண்” என நச்சினார்க்கினியர் பொருளுரைப்பது காண்க. ஒப்பான பாவி வேறு இல்லாமையால் “மனமென்னும் ஒரு பாவி” என வுரைக்கின்றார். மகளிர் உறுப்பு நலம் கண்டு மனம் காம மயக்குறுவதால் வெறுப்புற்று, “மனம் எனும் ஒருபாவி மங்கையர் தம் அங்கம் உற்று மயல் என்னும் அது மேவி மாழ்க” என்று கூறுகின்றார். திருவருள் வாழ்வு பெறற்கு உலகியற் பொருள் வாழ்வின்பால் ஆசை கொளல் தடையாதலால் அதனை நீக்குக என மனத்திற்கு உரைத்ததை, “நான் வாழ்க இந்தப் படி என்னும் ஆசையைக் கடி என்ன” என்றும், அதனைக் கொள்ளாமல் மறுத்து நான் சொல்லுகிறபடி உலகியலில் தோய்ந்தமைக என்று மனம் உரைக்கின்றது என்பாராய், “என் சொல் இப்படி யென்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும்” என்றும் உரைக்கின்றார். இன்ன வித்தை, இவ்வுலகியற் பொருள் வாழ்வில் தோய்ந் தொழியும் வித்தை. இம்மனம் துணையாகாத விடத்து அருள் வாழ்வும் பேறும் கைவராதாகலின், நினது திருவருளாலன்றி வேறு செய்வகை அறிகிலேன் என்பார், “என் செய்குவேன்” என்று இயம்புகின்றார். மனம் துணையானாலன்றி இன்பமோ துன்பமோ நுகர் வரிதாம் என்பதைத் “துன்பத்திற்கி யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி” (குறள்) என்று திருவள்ளுவர் கூறுவர். இத்திருக்குறளில் “தம்முடைய” என்னாமல் “தாம் உடைய நெஞ்சம்” என்பதனால், “நெஞ்சினைத் துணையாக்கிக் கோடல் அதனைக் கருவியாகவுடைய மக்கள் கடன்” என்பது உய்த்துணர நிற்பது காண்க.
இதனாற் பிணங்கும் மனத்தின் செயலைத் தெரிவித்து இணங்குதற்குதவுமாறு சண்முகப் பெருமானை வேண்டிக் கொண்டவாறாம். (3)
|