பக்கம் எண் :

30.

    எத்திக்கு மென்னுளம் தித்திக்கும் இன்பமே
        என்னுயிர்க் குயிராகு மோர்
        ஏகமே ஆனந்த போகமே யோகமே
        என்பெருஞ் செல்வமே நன்
    முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
        மூர்த்தியே முடிவிலாத
        முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
        முத்தாடும் அருமை மகனே
    பத்திக்கு வந்தருள் பரிந்தருளும் நின்னடிப்
        பற்றருளி யென்னை யிந்தப்
        படியிலே யுழல்கின்ற குடியிலே ஒருவனாப்
        பண்ணாம லாண்டருளுவாய்
    சத்திக்கு நீர்ச் சென்னைக் கந்த கோட்டத்துள்வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     முழங்குகின்ற கடற்கரையில் உள்ள சென்னை நகர்க் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளுட் சைவமணியாகிய ஆறுமுகத் தெய்வமணியே, எப்பக்கம் நோக்கினும் உள்ளத்தில் தோன்றி இனிக்கும் இன்ப வடிவினனே, எனது உயிர்க்குயிராய் இலகும் ஒப்பற்ற ஒரு தனிப் பொருளே, ஆனந்தமாகிய போகம் தருபவனே, யானே தானேயாய் ஒன்றி நிற்பவனே, எனக்குக் கிடைத்த பெருஞ் செல்வமே, நல்லதாய முத்திப் பேற்றுக்கு முழுமுதலாகிய முதல்வனே, மெய்யுணர்வின் உருவமே, மூத்து விளிதலில்லாத முருகப் பெருமானே, நெடியோனாகிய திருமாலுக்கு மருகனே, சிவபிரான் மார்போடணைத்து முத்தமிட்டின்புறும் அரிய மகனே. அடியார் செய்யும் பத்திக்கு மனமுவந்து திருவருளை அன்புடன் நல்கும் நின்னுடைய திருவடியை எனக்குப் பற்றாக உதவி இந்நிலவுலகில் திரிகின்ற குடிகளில் ஒருவனாக்காமல் ஆட் கொண்டருளுவாயாக. எ. று.

     சத்திக்கும் நீர் - முழங்குகின்ற கடல். கடற்கரை நகரமாதலால் சென்னையை இவ்வாறு புகழ்கின்றார். பார்க்குமிட மெங்கும் முருகப் பெருமான் நினைவே உள்ளத்தில் எழுந்து இன்பம் உறுவித்தலால், “எத்திக்கும் என்னுளம் தித்திக்கும் இன்பமே” என்று கூறுகிறார். முருகன் நினைவு மனத்தின்கண் தோன்றித் தேனும் பாலும் போல இன்பம் ஊறுதலால் “உளம் தித்திக்கும் இன்பமே” என்று உரைக்கின்றார். இறைவன் திருவடி, “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” எனத் திருநாவுக்கரசர் புகல்வது காண்க. உயிர்க்குயிராய உணர்வு நல்குவது பரம்பொருளின் அருணிலையாதல் பற்றி “என் உயிர்க்குயிராகும் ஓர் ஏகமே” என்கின்றார். உயிர்கள் எண்ணிறந்தன வாயினும், தான் ஒன்றே அவை அனைத்தினும் நிறைந்திருக்குமாறு பற்றி “என் உயிர்க்குயிராகும் ஏகமே” என்று கூறுகின்றார். சாந்தோக்கிய முதலிய வேதாந்த நூல்கள், “ஏகம் எவ அத்விதீயம் பிரமம்” என்பது “ஓர் ஏகம்” என்ற கருத்தை வற்புறுத்துவது காண்க. இன்பமும் துன்பமுமாகிய இரண்டும் போகமாதலால், துன்பத்தை விலக்குதற்கு “ஆனந்த போகமே” என்று சிறப்பித்தும், ஞான யோகத்தின் விளைவாதல் தோன்ற “யோகமே” என்று விதந்தும் கூறுகிறார். யோகம்--கூடுதல். “பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே” (பிடித்த. 4) என மணிவாசகர் உரைக்கின்றார். பெருமை சிறுமைகட்கு ஏதுவாகிய பொருட் செல்வம் போலாது நலம் பயக்கும் பெருமை யெல்லாம் தருவதாகிய அருட் செல்வத்தின் உருவாதலால் முருகப் பிரானை, “என் பெருஞ் செல்வமே” என்று இசைக்கின்றார். முத்திப் பேற்றுக்கு முதலும், அதனை நல்கும் முதல்வனுமாதல் தோன்ற, “முத்திக்கு முதலான முதல்வனே” என மொழிகின்றார். “முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா” (ஆலங்காடு) என்று நம்பியாரூரர் இசைப்பது காண்க. மெய்ஞ்ஞான மூர்த்தி - மெய்யுணர்வின் திருவுரு. மூத்தலும் விளிதலும் இன்றி என்றும் இளமை யுடையனாதலால், “முடிவிலாத முருகனே” என்றும், முருகன் தேவியரான வள்ளியும் தெய்வயானையும் திருமாலின் மகளிராதலின், “நெடியமால் மருகனே” என்றும், சிவபிரான் நெற்றி விழியில் தோன்றி உமையம்மையின் கைத்தாமரையில் வளர்ந்து சிவ மூர்த்தியின் மடியில் தவழ்ந்து இன்புறுத்திய குறிப்பு விளங்க “சிவபிரான் முத்தாடும் அருமை மகனே” என்றும் பரவுகின்றார். பத்தி செய்யும் அடியவர்க்கு ஞானமும் முத்தியும் நல்குவது பற்றி, “பத்திக்கு உவந்து அருள் பரிந்தருளும் நின்” எனவும், திருவருள் ஞானம் பெறினும் அதனை மறவாது பற்றி உய்தி பெறுதற்குப் பற்றுக் கோடாதலால் முருகன் திருவடிப்பற்றினை அருளுக என்பார், “நின்னடிப் பற்றருளி” எனவும், மண்ணக வாழ்வில் குற்றமே பலவாதலால், அவற்றினின்றும் காத்தல் வேண்டும் என்பார், “இந்தப் படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப் பண்ணாமல் ஆண்டருளுவாய்” எனவும் வேண்டுகின்றார். “மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்” (நனிபள்ளி) என நாவுக்கரசர் உரைத்தலால், மண்ணில் வாழ்கின்ற குடிகளில் ஒருவனாக வாழ்விக்க வேண்டா என முறையிடுகின்றார்.

     இதனால் மண்ணக மக்களில் ஒருவனாக விடாமல் திருவடித் தொண்டருள் ஒருவனாக்குக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (30)