பக்கம் எண் :

3004.

     அம்பலத் தாடும் அழகனைக் காணா
          தருந்தவும் பொருந்துமோ என்பாள்
     கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள்
          கைகுவிப் பாள்உளங் கனிவாள்
     வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள்
          வள்ளலைப் பரிகிலீர் என்பாள்
     உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள்
          உயங்குவாள் மயங்குவாள் உணர்வே.

உரை:

     அம்பலத்தில் ஆடல் புரிகின்ற சொக்கனைக் கண்களாற் காணாமல் உணவருந்துதற்கு மனம் பொருந்துமோ எனவும், கச்சணிந்த கொங்கைகளைப் பார்த்து வள்ளலாகிய அப்பெருமானை அன்புடன் கூடுகிறீரில்லை; உங்கட்கு மேலோனாகிய அவனைப் பெறுதற் கெனத் தவம் செய்வீர்களாக எனவும் சொல்லி, என் மகள், மெய் நடுக்குற்றுக் கண்கள் நீர் சொரியக் கைகளைக் குவித்து, மனம் குழைந்து, சோர்ந்து உணர்வு மயங்குகின்றாள்; நான் என்ன செய்வேன். எ.று.

     மகளே, பசி மிக்கு வருந்துகின்றாய்; இந்தப் பாலை யுண்க என்று சொன்னால், சிவபரன்மேலுள்ள காதல் மிகுதியால், தில்லையம்பலத்தில் ஆடல் புரியும் பேரழகனாகிய அவனைக் கண்களாற் கண்டு, தெளியாமல் பாலும் உண்ணஎன்மனம் விரும்பாது என்பாளாய், அம்பலத்தாடும் அழகனைக் காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள்” என்றும், தன்னுடைய கொங்கைகள் இரண்டினையும் தானேபார்த்து வள்ளற்பெருமானாகிய அவன் மார்பைப் பொருந்திப் புணர்ந்து இன்பம் பெறுகின்றீரில்லையே; உங்களது பரமனைக் கூடுதல் வேண்டி நல்ல தவம் செய்மின்; அவனைப் பெறலாம் என்பாளாய், “வம்பணி முலைகள் இரண்டுநோக்கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர்” என்றும், “உம்பரன் தவம் செய்திடுமின் நீர்” என்றும் இயம்புகின்றாள். “இளைக்கலாத கொங்கைகள்! எழுந்து விம்மி என்செய்தீர்; முளைக்கலாத மதிக் கொழுந்து போலும் வாண் முகத்தினான்; வளைக்கலாத விற்கையணி வள்ளல் மார்பின் உள்ளுறத் திளைக்கலாகுமாயின் செம்தவங்கள் செய்ம்மினே” எனச் சீதை தன் கொங்கைகளைப் பார்த்துக் கூறியதாகக் கம்பர் கூறுவது காண்க. கம்பம் - மெய்நடுக்கம். வம்பு - கச்சு. பரிதல் - அன்புடன் கூடுதல். உயங்குதல், சோர்தல், வேட்கை மீதூர்ந்த பெண்மை தலைவனைக் கூடப் பெறாமைக்கு வருந்தித் தன் கொங்கைகளை நோக்கி, “பொங்கிய பாற்கடற் பள்ளி கொள்வானைப் புணர்வதோ ராசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை யாகுலம் செய்யும்” (நாச்சி. 5:7) என்று சொல்லி, “கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டவன் மார்பிலெறிந் தென்னழலைத் தீர்வேனே” (நாச்சி.13:8) என்றும், “கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற் கோர் குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவம்தான் என்” (நாச்சி.13:9) என்றும் ஓதி வருந்துவது காண்க.

     (9)