37. சல்லாப லகரி
அஃதாவது, வலர் பொருள்பட இன்னுரை யாடி மகிழ்தல்.
கலிநிலைத் துறை
3005. சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
உரை: அம்மா, அழகிய திருநீற்றை மேனியில் அணிந்து கொள்ளும் அழகரும், கூத்தாடும் தொழிலில் வல்லவருமாகிய அவர் இங்கே என் முன் வந்தருளினாராக, வணக்கம் என்று அன்பு தோன்றச் சொன்னேன்; பெண்ணே, நான் சொல்வது ஒரு மறைபொருள்; இதனைக் கேள்; நம்முடைய வாழ்வு நிலைத்த செல்வ மன்று; வாழ்வெல்லாம் நிலையின்றிக் கெடுவன, காண் என்று மொழிந்தார்; அவருடைய சூதினை என்னென்பது. எ.று.
சுந்தரம் - அழகு. சுந்தரர் - அழகர். தமது நடனக் கலையைத் தமக்கொரு தொழிலாகக் கொண்டு உலகுகளைப் படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் செய்கின்றார் என்பாளாய், “நடனத் தொழில் வல்லார்” என்று சொல்லுகிறாள். என் மனைக்கண் என் முன்பு வந்தார் என்றற்கு “இங்கே வந்தனர்” எனக் கூறுகின்றாள். அவரைக் கண்டதும் காதலன்பு மிகக்குறவே, வணக்கம் என்பேனாய், “வந்தனம் என்றேன்” என விளம்புகிறாள். நான் வந்தனம் என்றதை, இம் மண்ணுலக வாழ்வை வேண்டி வந்துள்ளோம்; அதனை நன்குகூடி இன்புற்று வாழலாம் என்றதாகக் கொண்டு நான் ஒரு மறைபொருள் கூறுகிறேன் கேள் என்பாராய், “மந்தணம் இது கேள்” என்று தொடங்கி, இவ்வுலக, வாழ்வுகள் நிலைத்த இன்ப மில்லாதவை என்றற்கு “அந்தனம் இல வாழ்வு” எனவும், இம்மை மறுமை எனப்படுகின்ற வாழ்வுகளெல்லாம் நிலைபேறின்றிப் பொய்யாம் என அறிக என வுரைப்பாராய், “எல்லாம் அந்தரம் என்றார்” எனவும் மொழிகின்றாள். மந்தணம் - மறைபொருள்; இரகசியம். அந்தனம், அழகிய செல்வம்; அழகாவது நிலைத்த தன்மை. என்றும் நிலைத்திருக்கும் தன்மை இவ்வாழ்வுகட்கு இல்லை என்றற்கு “அந்தனம் இல” எனப்படுகிறது. அந்தரம் - பொய்யாக் கெடுவது. சூது, உள்ளொன்றும் புறமொன்றுமாக மறைத்துப் பேசுவது. வந்தனம் என்பதை வம்மின்; யான் தன முடையேன் எனப் பொருளுரைத்தலும் உண்டு. வம் - வருக. “மனிதர்காள் இங்கேவம்” (தனிக்) எனத் திருநாவுக்கரசர் வழங்குதல் காண்க. தனம் உளதாயினும் அதனைச் சொல்லலாகாது என்றற்கு, “மந்தணம் இது” என்றார் எனினுமாம். “உடையது விளம்பேல்” என்பர் ஒளவையார்.
இதனால், மண்ணக வாழ்வின் நிலையாமை தெரிவித்தவாறாம். (1)
|