பக்கம் எண் :

3008.

     மிகுத்துரைத்தேன் பிழைகள்எலாம் சகித்தருளல் வேண்டும்
          மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
     தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
          துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
     பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
          பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
     வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
          மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.

உரை:

     மெய்ம்மையும், இன்பமும், அறிவுமாகிய உருவு கொண்டு, அகன்ற தில்லையம்பலத்தில் நடிக்கின்ற பெருமானே, மறை வல்லவர் முதலில் தொடுத்தும், பின்னர் விரித்தும் உரைத்தும் தெளிவு காணப்படாத துரியாவத்தைக்கண் நடுவே தோன்றும் பெருமைக்குரிய பரம்பொருளே, சான்றோர்கள் பல வகையாகப் பகுத்துரைத்த உரைகளுக்கெல்லாம் ஒன்றாகிய பொருளாய் ஒளிர்கின்ற பரஞ்சுடரே, பரம்பரனே, பசுபதியே, அடியவளாகிய யான், வேறு வகுத்துரைப்பதற்கு யாது உளது நீ, உனது திருவருளை நல்கினும் நல்கா தொழியினும் உன்னையன்றி வேறு எனக்குத் துணையில்லை. இந்நிலையில் நான் மிகைபடப் பேசிய குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டுகிறேன். எ.று.

     மெய்ம்மை, அறிவு, இன்பம் என்ற முன்றையும் முறையே சத்து, சித்து, ஆனந்தம் என நிறுத்தி, “சச்சிதானந்தம்” எனக் கூட்டியுரைப்பர் வட நூலார். இதனைத் “தேடரிய சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே” எனத் தாயுமானவர் உரைக்கின்றார். தில்லையம்பலத்தில் ஆடும் கூத்தப்பிரான் சச்சிதானந்த உருவினன் என்பாராய், “மெய்யறிவின் புருவாகி வியன் பொதுவில் நடிப்போய்” என விளம்புகின்றாள். கூத்தனைச் சச்சிதானந்த வுருவினன் எனவே, அவனது அம்பலம் பராகாசம் எனப்படுகிறது. அது பற்றியே அதனை, “வியன் பொது” என விளம்புகின்றாள். மாயா காரியமாகிய அண்டங்களுக்குரிய ஆகாசங்கள் அவற்றுக்குக்கப்பாலுள்ள சிவாகாசத்து அபரமாதலின், அச்சிவாகாசம் பராகாசமாய் எல்லாவற்றிற்கும் பொதுவாதல் அறியப்படுதலின், வியன் பொது எனல் வேண்டிற்று. அது ஞான மயமாதலின் சிதாகாசம் எனவும் கூறப்படுகிறது. இருக்கு முதலாக வேதங்கள் நான்கும் தொகையெனவும், அவற்றின் நுண் பொருளை விரித்துரைக்கும் உபநிடதங்கள் பலவற்றையும் வேதாந்த விரியெனவும் அறிந்தோர் உரைப்பதால், “தொகுத்துரைத்த மறைகளும் பின் விரித்துரைத்தும்” என்றும், இவற்றாலும் தெளியப் படாமை தோன்றக் “காணா” என்றும், துரிய நடுவென்று சித்தாந்தத்தால் துணியப்படுதலின்” “துரிய நடுவேயிருந்த பெரிய பரம்பொருளே” என்றும் உரைக்கின்றார். “ஓரும் வேதாந்தம் என்றுச்சியிற் பழுத்த சாரங் கொண்ட சைவசித்தாந்தம்” (பண்டார) என்று குமரகுருபரரும், “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாத்தம்” (சிவப்) என உமாபதி சிவனாரும் உரைப்பது அறிக. பரம்பொருளினும் பெரிய தொன்று இல்லையாயினும் அதன் பெருமையைப் புலப்படுத்தற்குப் “பெரிய பரம்பொருள்” என்று கூறுகிறார். இது பற்றியே வேதாந்த நூல்கள் பிரமப்பொருள் என்கின்றன. துரியம் என்பது உந்தியிடம். அகக்கண் கொண்டு புருவ நடுமுதலாக கண்டம், இதயம் முதலிய வாயில்களிற் செலுத்தித் துரியத்தை நாடுவார்க்கு அங்கே உந்தி நடுவே சிவவொளியைத் தரிசிப்பவர்க்கு அது தோன்றும் என்பாராய், “துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருள்” எனச் சுட்டுகின்றார். அக்காட்சியின்பத்தை “அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்தி) என்று திருமூலர் அறிவிக்கின்றார். இதனை யோகக் காட்சி என்பதும் உண்டு. பொருள்களைக் காரண காரிய முறையிலும், பகுதி விகுதி முறையிலும் பகுத்து ஆராய்ந்து உண்மை காண்பது அறிவுநெறி. அந்த அறிவு நெறிக்கண் கண்டுரைத்த பொருள் என்றற்குப் “பகுத்துரைத்த பயன் உரைக்கோர் பொருளாக விளங்கும் பரஞ்சுடர்” எனப் பகர்கின்றார். பொருள்களைப் பகுத்துணரும் நெறியில் அணுவாய், அணுவுக் கணுவாய், முடிவில் ஒளியாய் ஒளிர்வது பற்றிப் “பரஞ்சுடர்” என்கின்றார். “பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதி” (மனத்) என நாவுக்கரசர் விளக்குதல் காண்க. மேலான பொருள் எல்லாவற்றிற்கும் மேலாய்த் தனக்கு மேல் ஒன்றும் இல்லாதவன் என்றற்குப் “பரம் பரன்” என்கின்றார். உலகுயிர்கட்குத் தலைவன் என்பது படப் “பசுபதி” என்கின்றார். அருளுருவாய இறைவன் அருளாமை இல்லையெனினும், காலமும் இடமும் காரணமாகத் தனது அருளை வழங்குகின்றானாதலின், அல்லாக் காலத்து அவ்வருட் பேறு எய்தாமைபற்றி, “அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும்” என்றும், அவனையன்றி அருள் வழங்குவார் பிறர் இல்லாமையான், “உன்னையலால் மற்றொரு சார்பிலனே” என்றும் உரைக்கின்றார். நல்லதன் நலத்தையோ தீயதன் தீமையையோ மிகைபட மொழிந்தவழிக் குற்றம் விழைதலின், “மிகுத்துரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்தருளல் வேண்டும்” என விளம்புகின்றார். பொறுத்துல் என்பது “காரணம் பற்றியாதல், மடமையானாதல், மிகை செய்த வழிப் பொறுத்தல்” என்று பெரியோர் கூறுவராதலின், “பிழைகள் எலாம் சகித்தருளல் வேண்டும்” எனச் சாற்றுகின்றார். சகித்தல் - பொறுத்தல்.

     இதனால், மிகைபடச் செய்தும், மொழிந்தும் இழைத்த குற்றங்களைப் பொறுத்தருளுமாறு முறையிட்டவாறாம்.

     (2)